Friday, February 10, 2017

சிறை வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை மீட்க ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

DINAMALAR
சென்னை: எம்.எல்.ஏ.,க்களை மீட்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் நேற்று, வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, 'குன்னம் தொகுதி எம்.எல்.ஏ., ஆர்.டி.ராமச்சந்திரனை, சட்டவிரோதமாக சிலர் பிடித்து வைத்துள்ளனர்.இவரை போல, 130 எம்.எல்.ஏ.,க்கள், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்க கோரி, குன்னம் தொகுதியை சேர்ந்த வாக்காளர் இளவரசன் என்பவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த மனுவை, உடனே விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். 

இதற்கு நீதிபதிகள், 'ஏற்கெனவே, 'டிராபிக்' ராமசாமி, இதே கோரிக்கையுடன் எங்களது சேம்பரில் முறையிட்டுள்ளதால், முதலில் வழக்கை தாக்கல் செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம்; நீங்களும், மனு தாக்கல் செய்யுங்கள். மற்ற வழக்குகளுடன், உங்களது வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர்.அப்போது, அரசு வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சுதந்திரமாக, எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாரும் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்படவில்லை,'' என்றார். இதற்கு, மனுதாரரான வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு வெளியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறைபிடித்த நிலையில் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்,'' என்றார். இதையடுத்து, 'வழக்கை முதலில் தாக்கல் செய்யுங்கள்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 மனு தாக்கல்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள ஆர்.டி.ராமச்சந்திரன், 8ம் தேதி, சென்னையில் நடைபெற்ற, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்; அதன்பின், அவரை காணவில்லை. ராமச்சந்திரன் உட்பட, 130 எம்.எல்.ஏ.க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஒரு சொகுசு பங்களாவில், தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, அங்கிருந்து தப்பி வந்த, ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்தார்.எம்.எல்.ஏ.க்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உட்பட, 130 எம்.எல்.ஏ.,க்களையும், உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கூவத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, கிருஷ்ணராஜபுரம், எம்.எல்.ஏ., கீதாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி, உறவினர் ஒருவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன், விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

No comments:

Post a Comment

State govt bans 10 intravenous fluids

State govt bans 10 intravenous fluids  MOVE AFTER WOMAN’S DEATH  Sujoy Khanra TNN  12.01.2025 Kolkata : The state health department on Satur...