22. தந்தையை விஞ்சிய தனயன் - ஆர்.டி. பர்மன்
By கருந்தேள் ராஜேஷ் | Published on : 05th May 2017 09:28 PM |
எஸ்.டி. பர்மனைப் பற்றி நாம் கவனித்திருக்கிறோம். அவரது புதல்வர் ஆர்.டி. பர்மன் என்ற ராகுல் தேவ் பர்மன், இந்தியாவின் புதழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். எஸ்.டி. பர்மனின் மறைவுக்குப் பின்னர் ஹிந்தித் திரையுலகைப் பல வருடங்கள் அரசாண்டவர். ஐம்பத்து நான்கே வயதில் வாரிசில்லாமல் இறந்துவிட்டாலும்கூட, இன்றும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பல பாடல்கள் இவர் இசைத்தவையே.
ஆர்.டி. பர்மனின் முதல் ட்யூன், அவரது ஒன்பதாவது வயதில் இசையமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமானது. சிறுவயதில் அவர் கம்போஸ் செய்த ட்யூனை, ‘ஃபந்தூஷ்’ (1956) படத்தில் எஸ்.டி. பர்மனால் ‘ஆயே மெரி டோபி பலட் கே ஆ’ என்ற பாடலுக்காகப் பின்னர் எஸ்.டி. பர்மன் உபயோகித்துக்கொண்டார். ஆர்.டி. பர்மன் மிகச்சிறுவயதில் இப்படி இசையமைத்ததில் ஆச்சரியமே இல்லை. அவரது தந்தை எஸ்.டி. பர்மன் எப்படியெல்லாம் இசை கற்றுக்கொண்டார் என்று நாம் ஏற்கெனவே கவனித்திருக்கிறோம். அதேபோல் ஆர்.டி. பர்மனுக்கும், தந்தையிடமிருந்தும், பின்னர் அலி அக்பர் கான் (சரோட்), சம்தா பிரஸாத் (தப்லா) முதலிய சிறந்த இசைக்கலைஞர்களிடமிருந்தும் இசை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதை அவர் திறம்படவும் கற்றார்.
இசையை நன்கு கற்றுத் தேர்ந்தபின்னர், ‘சொல்வா சால்’ (1958), ‘சல்த்தி கா நாம் காடி’ (1958), ‘காகஸ் கி ஃபூல்’ (1957) முதலிய சில படங்களில் தந்தையிடமே உதவியாளராகவும் பணியாற்றினார் ஆர்.டி. பர்மன். இவைகளைத் தொடர்ந்து, தனது இருபதாவது வயதில், 1959ல், ‘ராஸ்’ என்ற படத்தில் இசையமைப்பாளராகும் வாய்ப்பு ஆர்.டி. பர்மனுக்குக் கிடைக்கிறது. ஆனால், குருதத்தை வைத்து அவரது உதவியாளர் நிரஞ்சன் இயக்க இருந்த அப்படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தந்தையிடமே உதவியாளராக மாறினார் பஞ்ச்சம் (ஆர்.டி. பர்மனின் செல்லப்பெயர். இப்பெயராலேயே இன்றும் ‘பஞ்ச்சம் தா’ என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார்).
1961ல், ‘ச்சோட்டே நவாப்’ என்ற படத்தை, பிரபல நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் தயாரிக்கிறார். இப்படத்தில் எஸ்.டி. பர்மன் இசையை நாடி அவரது வீட்டுக்குச் செல்கிறார். எஸ்.டி. பர்மன் நேரமின்மையால் இசையமைக்க மறுக்க, வீட்டில் தப்லா வாசித்துக்கொண்டிருந்த இளைஞன் பஞ்ச்சமையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறார் மெஹ்மூத். இதுதான் ஆர்.டி. பர்மனின் முதல் படம். இதன் பின்னர் ‘பூத் பங்ளா’, ‘தீஸ்ரா கோன்’ ஆகிய படங்கள் 1965ல் வெளியாகின்றன. அடுத்த ஆண்டு வெளியான ‘தீஸ்ரி மன்ஸில்’ (1965) படம்தான் ஆர்.டி. பர்மனை ஊரெல்லாம் அறியச்செய்தது. பூத் பங்ளாவிலேயே ‘ஆவோ ட்விஸ்ட் கரே(ன்)’, ‘எக் சவால் ஹை’ முதலிய ஹிட்கள் இருந்தன. ஆனால் தீஸ்ரி மன்ஸில்தான் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆன முதல் ஆர்.டி பர்மன் படம். ஷம்மி கபூர் நடித்திருந்த இப்படத்தின் கதாநாயகி ஆஷா பாரேக். படத்தை இயக்கியவர் தேவ் ஆனந்தின் சகோதரர் விஜய் ஆனந்த். படத்தை எழுதித் தயாரித்தவர் பிரபல இயக்குநர் நஸீர் ஹுஸைன். தீஸ்ரி மன்ஸில், தேவ் ஆனந்த் நடிக்கவேண்டிய படம். ஆனால் தேவ் ஆனந்தும் நஸீர் ஹுஸைனும் ஒரு பார்ட்டியில் (நடிகை சாதனாவின் நிச்சயதார்த்தத்துக்கான பார்ட்டி அது) லேசாகக் குடித்துவிட்டுச் சண்டையிட்டதால், நஸீர் ஹுஸைன், தேவ் ஆனந்தை இப்படத்தில் இருந்து விலக்கி, ஷம்மி கபூரைச் சேர்த்தார்.
படம் பிரம்மாண்ட ஹிட் ஆனது. பாடல்களின் ட்யூனை ஆர்.டி. பர்மன் ஷம்மி கபூருக்குப் பாடிக்காட்டியபோதே அங்கேயே ஷம்மி கபூர் எழுந்து சந்தோஷமாக நடனமாடியிருக்கும் அளவு அவருக்குப் பாடல்கள் பிடித்துவிட்டன. அதேபோல், ‘ஓ ஹஸீனா ஸுல்ஃபோவாலி ஜானே கஹா’, ஓ மேரா சோனா ரே சோனா ரே’, ‘தும்னே முஜே தேகா ஹோ கர்’ முதலிய பாடல்கள் இந்தியாவெங்கும் பிரபலம் ஆயின. உடனடியாக ஆர்.டி. பர்மனுக்குப் பல வாய்ப்புகள் குவிந்தன. அன்றில் இருந்து அவர் இறந்த 1994 வரை இந்தியாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக விளங்கினார் ஆர்.டி. பர்மன். இந்தப் படத்துக்குப் பின்னர், 1985ல் நஸீர் ஹுஸைன் இயக்கிய ‘ஸபர்தஸ்த்’ படம் வரை அவரது அத்தனை படங்களுக்கும் ஆர்.டி. பர்மன் தான் இசை.
‘தீஸ்ரி மன்ஸில்’ படத்தைத் தொடர்ந்து, பதி பத்னி, சந்தன் கா பால்னா, பஹாரோ(ன்) கே சப்னே, படோசன், ப்யார் கா மௌசம், வாரிஸ் என்று வரிசையாக இசையமைக்கத் துவங்கினார் ஆர்.டி. பர்மன். 1970ல் வெளியான கடீ பதங்க் திரைப்படம், ஆர்.டி. பர்மனுக்கு ஒரு மிகச்சிறந்த ஹிட்டாக அமைந்தது. இப்படத்தின் ‘யே ஜோ மொஹப்பத் ஹை’, ‘யே ஷாம் மஸ்தானி’, ‘ப்யார் திவானா ஹோதா ஹை’, ஆஜ் ந ச்சோடேங்கே’, ‘நா கொயீ உமங் ஹை’ ஆகிய பாடல்கள் பிரம்மாண்ட ஹிட்கள் ஆயின. இதற்கு முன்னரே இயக்குநர் ஷக்தி சமந்தா & ராஜேஷ் கன்னா ஆகியோரின் கூட்டணியில் வெளியான ஆராதனா பிரபல ஹிட் ஆகியிருந்தது (இசை, எஸ்.டி. பர்மன். ஆனாலும் படத்தின் இரண்டு பாடல்கள் ஆர்.டி. பர்மன் இசையமைத்ததாகவே இன்றுவரை பேசப்படுகிறது).
இதற்குப் பிறகு, ‘கேரவான்’ (1971), ‘புட்டா மில் கயா’ (1971), ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ (1971), ‘சீதா ஔர் கீதா’ (1971) என்று தடதடவென்று சூப்பர்ஹிட் இசை ஆர்.டி. பர்மன் வழியாக இந்தியாவெல்லாம் பாய்ந்தது. குறிப்பாக ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில், ‘தம் மாரோ தம்’ பாடல் உலக ஹிட் ஆனது. அப்பாடலின் வீச்சால் பயந்துபோன இயக்குநர்-நடிகர் தேவ் ஆனந்த், அப்பாடலைப் படத்தில் முழுதாக வைக்கவே இல்லை. வைத்தால், படத்தைப் பாடல் மிஞ்சிவிடும் என்று அஞ்சினார்.
No comments:
Post a Comment