Sunday, September 17, 2017

3 வயது குழந்தை, ரூ.100 கோடி சொத்துகளை உதறிவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் மத தம்பதியினர்


By DIN  |   Published on : 17th September 2017 01:32 AM  | 
family
Ads by Kiosked
ராஜஸ்தான் மாநிலத்தில், 3 வயதே ஆகும் பெண் குழந்தை, ரூ.100 கோடி மதிப்புடையச் சொத்துகளை உதறிவிட்டு, ஜெயின் மதத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் துறவறம் செல்லவுள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
ராஜஸ்தான் மாநிலம், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் ராத்தோர் (35). ஜெயின் மதத்தின் ஸ்வேதம்பர் பிரிவைச் சேர்ந்த ராத்தோர், ராஜஸ்தானில் தனது குடும்பத்தினரின் தொழிலை நிர்வகித்து வருகிறார். 
அதற்கு முன்பு லண்டனில் அவர் பணியாற்றினார். அவரது மனைவி அனாமிகா (34) என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவருக்கும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 
இந்நிலையில், சூரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமித் ராத்தோர், ஜெயின் மத வழக்கப்படி, துறவறம் செல்ல விருப்பம் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த துறவி ஆச்சார்ய ராம்லால் மகராஜ் என்பவர், துறவறம் செல்வதற்கு அனாமிகாவின் சம்மதத்தை கேட்டுப் பெறும்படி தெரிவித்துள்ளார். இதை அனாமிகாவிடம் ராத்தோர் தெரிவித்தபோது, அதை அவர் உடனடியாக ஏற்றார். மேலும், ராத்தோருடன் சேர்ந்து தாமும் துறவறம் பூண்டு கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
பின்னர் இந்த முடிவை ராத்தோரும், அனாமிகாவும், தங்களது பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்ட உறவினர்கள், துறவறம் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தங்களது முடிவில், ராத்தோரும், அனாமிகாவும் உறுதியாக இருந்தனர். அதனால், அந்த முடிவை உறவினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதன்படி, சூரத்தில் வரும் 23}ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இருவருக்கும் ஜெயின் மதத் துறவி ஆச்சார்ய ராம்லால் மகராஜ் துறவறம் செய்து வைக்கவுள்ளார். இதற்கு ஏற்ப, இருவரும் தற்போதிலிருந்தே மௌன விரதம் இருந்து வருகின்றனர்.
இருவரும் துறவறம் பூண்டதும், அவர்களது தலைமுடி முழுவதும் மழிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்படும். வெள்ளை நிறத்திலான உடையையே இருவரும் அணிய வேண்டும். தம்மை அறியாமல் கூட உயிரினங்களுக்கு கெடுதல் செய்து விடக் கூடாது என்பதற்காக, பேசும்போது வாய்க்குள் சிறிய வகை பூச்சிகள் சென்றுவிடாமல் இருக்கும் வகையில், வாயைச் சுற்றிலும் வெள்ளைத் துணியை சுற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடைமுறையை வாழ்நாள் முழுவதும் ராத்தோரும், அனாமிகாவும் கடைபிடிக்க வேண்டும்.
சுமித் ராத்தோர், லண்டனில் படிப்பை முடித்து, அங்கேயே 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆவார். அனாமிகா, 8ஆம் வகுப்புத் தேர்வில் நீமுச் மாவட்டத்தில் முதலாவது வந்து தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் தற்போது ரூ.100 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. அதேபோல், பெண் குழந்தையும் உள்ளது.
ராத்தோரும், அனாமிகாவும் துறவறம் செல்வதால், பெண் குழந்தையை பெற்றோரிடம் விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து அனாமிகாவின் தந்தை அசோக் சந்தாலியா கூறுகையில், "எனது பேத்தியை நாங்கள் கவனித்துக் கொள்வோம். எனது மகள் துறவறம் செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை' என்றார். இதே கருத்தை ராத்தோரின் தந்தை ராஜேந்திர சிங்கும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, குஜராத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் வணிகப் பாடத்தில் 99.99 சதவீதம் மதிப்பெண் எடுத்த சிறுவன் ஒருவர், துறவறம் பூண்டது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024