Wednesday, September 20, 2017

அக்டோபர் முதல் குறையும் செல்போன் கட்டணம்!

தினேஷ் ராமையா

செல்போன் இணைப்புக் கட்டணத்தை 57 சதவிகிதம் அளவுக்கு மத்திய தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது.




செல்போனில், ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமான சிம் கார்டிலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்குச் சொந்தமான சிம் கார்டுக்கு அழைக்கும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு நிமிட அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைப்புக் கட்டணம், நிமிடத்துக்கு 14 பைசா என்ற அளவில் இதுவரை வசூலிக்கப்பட்டுவந்தது. இந்த இணைப்புக் கட்டணத்தை 6 பைசா என்ற அளவுக்கு டிராய் குறைத்துள்ளது. இணைப்புக் கட்டணக் குறைப்பு, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், உள்நாட்டில் இணைப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது. அதேபோல, செல்போனிலிருந்து லேண்ட் லைன் அழைப்புகளுக்கான இணைப்புக்கு, முன்பிருந்ததுபோலவே கட்டணம் ஏதுமின்றித் தொடரும் என்றும் டிராய் அறிவித்துள்ளது. செல்போன் இணைப்புக் கட்டணம் குறைந்துள்ளதால், செல்போன் கட்டணமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024