Wednesday, September 20, 2017

தேசிய செய்திகள்

திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள, வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

செப்டம்பர் 20, 2017, 04:00 AM

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள, வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதனால், 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை, அதாவது தெலுங்கு யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு, முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடப்பது வழக்கம்.

இந்தநிலையில் 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. அதையொட்டி ஏழுமலையான் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. காலை 6 மணியளவில் பிரதான நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டது. கோவிலை சுத்தம் செய்யும் முன்பே, மூலவர் வெங்கடாஜலபதி மீது அசுத்த தண்ணீர் படாமல் இருப்பதற்காக, அவர் மீது விலை உயர்ந்த பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு, மூலவர் சன்னதியில் இருந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்துச் சன்னதிகள், தரை தளம், மேற்கூரை, சுவர்கள், தூண்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் தூண்கள், சுவர்கள், மாடங்கள் ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் மற்றும் சுகந்த திரவியம் ஆகியவை பூசப்பட்டது.

இதையடுத்து மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு, பகல் 11 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை அர்ச்சகர்கள் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். நண்பகல் 12 மணிக்குமேல் பிரதான நுழைவு வாயில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கோவிலில் நேற்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேர தரிசனமும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024