Wednesday, September 20, 2017

மாநில செய்திகள்

புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 20, 2017, 03:15 AM
சென்னை,

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியிலும், நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2016-2017-ம் கல்வி ஆண்டில் 778 மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக சேர்க்கப்பட்டதாக கூறி அந்த மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி புதுச்சேரி அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ மாணவர்களான திவ்யா, விவேக், விக்னேஷ் உள்பட 108 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு பின்பு திடீரென்று எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பதால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விட்டு எங்களை மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 778 மருத்துவ மாணவர்களையும் நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024