Thursday, September 21, 2017

முக்கிய வழித்தடங்களில் விரைவில்... மகளிருக்காக மகளிர் மட்டும்! போக்குவரத்துக் கழகம் உறுதி
பதிவு செய்த நாள்21செப்
2017
00:46




கோவை : கோவையில், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 'மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள்' இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அப்போது இயங்கிய மகளிர் மட்டும் பஸ்களின் வழித்தட வரைபடம் மற்றும் அப்போது அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை துாசுதட்டி வருகின்றனர், போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.கோவை நகரில், 217 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதியில், 127 பஸ்களும்;நகர் பகுதியில், 90 பஸ்களும் இயக்கப்படுகின்றன. புதியதாக வந்த, 49 பஸ்களில், 29 பஸ்கள் புறநகர் பகுதிக்கும், 20 பஸ்கள் கோவை நகரிலும் இயக்கப்படுகின்றன.நகர் மற்றும் புறநகர் பகுதியில் இயங்கும் அனைத்து பஸ்களையும் பராமரிக்க, கோவை நகர் மற்றும் நகரை ஒட்டிய பகுதிகளில், 15 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த, 1995 முதல் 1997ம் ஆண்டு வரை, கோவை நகரிலுள்ள ஐந்து முக்கிய வழித்தடங்களில், 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில், கண்டக்டர் மற்றும் டிரைவர் மட்டுமே ஆண்களாக இருந்தனர். பயணிகள் அனைவரும் மகளிர்.பெரிநாயக்கன்பாளையத்திலிருந்து, பீளமேடு வரையும், சிட்ராவிலிருந்து பேரூர் வரையும், ஒண்டிப்புதுாரிலிருந்து வடவள்ளிவரையும், சரவணம்பட்டியிலிருந்து காந்திபுரம் வரையும், மருதமலையிலிருந்து ஆவாரம்பாளையம் வரையும் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களின் முன்னும் பின்னும் உள்ள பெயர் பலகையில், மகளிர் மட்டும் என்று எழுதப்பட்டு, வழித்தட எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பஸ்கள் அறிமுகமான போது, குறைந்த எண்ணிக்கையிலான மகளிர் மட்டுமே பயணித்தனர். நாளடைவில் இந்த பஸ்களில் பயணிக்க இடம் கிடைப்பது அரிதானது.கோவை நகரில் நடைபெற்ற கலவரம்; குண்டுவெடிப்பு; அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்; அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நடத்திய காலவரையற்ற போராட்டம் உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழகம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.அப்போது மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கையால், மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் அனைத்தும், சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டன. ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டும் இன்றும் மகளிர் ஸ்பெஷல் பஸ்சாக இயக்கப்படுகிறது. அதுவும் காலை, மாலை இரண்டு வேளைகளில், தலா ஒரு நடை மட்டும் மகளிர் ஸ்பெஷல் பஸ்சாக இயக்கப்படுகிறது

.இந்நிலையில் தற்போது, 'ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, கோவை நகரில் மகளிருக்காக, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்' என, மகளிர் அமைப்புகள், மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் கலெக்டரிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.இவர்களது கோரிக்கையை ஏற்று, கோவையிலுள்ள, பொள்ளாச்சி, பாலக்காடு, மருதமலை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அவிநாசி, திருச்சி ஆகிய சாலைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் பயனடையும் வகையிலும், அலுவலகம் செல்லும் மகளிர் வசதிக்காகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்களை விரைவில் இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மகளிர் அமைப்பினரும், மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பணிகள் வேகமெடுக்கும்!அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுளுக்கு முன்பு இருந்த, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்தும், அந்த பஸ்களின் வழித்தட வரைபடம் மற்றும் அப்போதைய அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளை கொண்டு, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வுக்குப்பின், கோவை நகரில் 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக துவங்கும்.இவ்வாறு பாண்டி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024