Saturday, September 23, 2017

திருமண மோசடி செய்யும் என்.ஆர்.ஐ.,பாஸ்போர்ட்...மத்திய அரசுக்கு
உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை


புதுடில்லி: 'என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், என்.ஆர்.ஐ.,யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம்' என, மத்திய அரசுக்கு உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.



'திருமணத்துக்கு பின் மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதில்லை; அங்கு அவர்களை கொடுமைபடுத்துகின்றனர்' என, என்.ஆர்.ஐ.,க்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன.தேசிய பெண்கள் ஆணையத்தின் தகவலின்படி, 2014ல் மட்டும், என்.ஆர்.ஐ.,க்களை திருமணம் செய்த பெண்கள், 346 புகார்களை அளித்துள்ளனர்.

இதை தடுக்கவும், பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவும், மத்திய வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர், மேனகாவும் இணைந்து, ஒரு குழுவை அமைத்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதியும், பஞ்சாப் மாநில, என்.ஆர்.ஐ., கமிஷன் முன்னாள் தலைவருமான, அரவிந்த் குமார் கோயல் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது;

இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில், மத்திய அரசக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

நிபுணர் குழு பரிந்துரைகள் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:பாதிக்கப்படும் பெண்கள் அளிக்கும் புகாரின் அடிப்படை யில்,சம்பந்தபட்ட, என்.ஆர்.ஐ., யின் பாஸ்போர்ட் முடக்கப்படுவதன் மூலம், விரைவாக நீதி கிடைக்க வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், என்.ஆர்.ஐ., மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அல்லது கோர்ட் உத்தரவு கிடைத்தால், அவரை நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியும்.

ஆனாலும், இது குறித்து விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மிகவும் சிக்கலான நடைமுறைகளால், இதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையையும், நாடு கடத்தும் சட்டப் பிரிவு களில் சேர்க்க வேண்டும்; இதன் மூலம், இந்தக் குற்றங்களை செய்வோரை நாடு கடத்தி வந்து, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
வெளிநாட்டில் உள்ள பெண், அங்கு வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் நிதியுதவியை, 1.8 லட்சம்ரூபாயில் இருந்து, 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு பல பரிந்துரைகளை, உயர்நிலை நிபுணர் குழு வழங்கியுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு, சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமண பதிவு கட்டாயம்:

மத்திய அரசு நியமித்து உள்ள உயர்நிலை நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமணம் செய்து ஏமாற்றுவது உள்ளிட்டவற்றை தடுக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும், என்.ஆர்.ஐ., திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதற்கு முன், மாநில அரசுகள் அதை செயல்படுத்தலாம்.

திருமணப் பதிவின்போது, என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட் விபரம், சமூக பாதுகாப்பு எண், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகள் ஆகியவற்றை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். பஞ்சாபில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

தேசிய பெண்கள் ஆணையத்தைத் தவிர, என்.ஆர்.ஐ., திருமண பிரச்னையை கவனிக்க, உள்துறை, வெளியுறவு, பெண்கள் வளர்ச்சி துறைகள் இணைந்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024