Saturday, September 23, 2017

அசல் ஓட்டுனர் உரிமம் மறந்தால் சிறையா?: ஐகோர்ட் கேள்வி

பதிவு செய்த நாள்23செப்
2017
04:33



சென்னை: 'அசல் ஓட்டுனர் உரிமத்தை மறந்து வைத்து விட்டாலும், சிறை தண்டனை விதிப்பது சரியா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உத்தரவு:

வாகனங்களை ஓட்டுபவர்கள், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது. அதை தொடர்ந்து, 'ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,யின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விசாரணை:

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், கோவிந்தராமன், 'அசல் உரிமம் இல்லை என்றால், சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமில்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, கோரினர்

தண்டனை சரியல்ல

அதற்கு, தலைமைநீதிபதி, ''வாகனங்கள் ஓட்டும் போது, அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும். உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது வேறு; ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டுவது என்பது வேறு. ''இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. அதற்காக, ஒருவர், உரிமத்தை எடுத்து வர மறந்து விட்டால், சிறை தண்டனை என்பது சரியல்ல,'' என்றார். பின், விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024