Monday, September 4, 2017

உலகில் பரவும் புதிய ஆட்கொல்லி: ‘ப்ளூவேல்’ அட்மினை நெருங்க முடியுமா? - தொடரும் புரியாத புதிர்கள்

Published : 02 Sep 2017 11:50 IST

மதுரை

(



உலகின் புதிய ஆட்கொல்லியாக உருவாகியுள்ள ‘ப்ளூவேல்’ சேலஞ்சிங் ஆன்லைன் விளையாட்டு, தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.

சமீபத்தில் கேரளாவில் ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டை விளையாடிய ஆஷிக் என்ற மாணவர் இறந்தார். மேலும், சில கல்லூரி மாணவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அம்மாநில போலீஸாரால் தற்போது வரை ‘ப்ளூவேல்’ சேலஞ்சிங் விளையாட்டின் அட்மின்களை கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்களை பெற முடியவில்லை. அவர்களை நெருங்கவும் முடியவில்லை.

நடவடிக்கைகளில் வித்தியாசம்

இந்நிலையில், தற்போது மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கலைஞர் நகரில் சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட பேக்கரி மாஸ்டர் ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ்(19) ‘ப்ளூவேல்’ விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மாணவர், சமீப காலமாக நள்ளிரவு நேரத்தில் யாருமே இல்லாதபோது வீட்டு மாடியில் நின்று செல்பி எடுப்பது, ப்ளூவேல் என்று ப்ளேடால் கைகளில் கீறிக் கொள்வது, ரத்தத்தில் எழுதுவது, குடிப்பழக்கத்துக்கு அடிமையானது என்று அவரது நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்துள்ளது.

ஆனால், இந்தளவுக்கு தற்கொலை வரை கொண்டு போய்விடும் என்பது, அவரது பெற்றோருக்கு தெரியவில்லை. இறந்த மாணவன் விக்னேஷூடன் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுவது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டுக்கு தடை

இதுகுறித்து கணினி தொழிநுட்ப வல்லுநர்களிடம் பேசியபோது, அவர்கள் கூறியது:

உலகளவில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாகத்தான் இந்தியாவில் ‘ப்ளூவேல்’ பற்றிய விளையாட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விளையாட்டுக்கான ‘லிங்’ சமூக வலைதளங்களில் வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. இந்த விளையாட்டு கணினி தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் பின்னணியில் உலகளவில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாக கூறப்படுகிறது.

அழித்துவிட கட்டளைகள்

தற்போது இறந்த விக்னேஷின் ஸ்மார்ட் போனை பறிமுதல் செய்த போலீஸார், அதில் ‘ப்ளூவேல்’ விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்களை பெற முடியவில்லை. விக்னேஷ் இறப்பதற்கு முன் போனில் உள்ள எல்லா தகவல்களையும் அழித்துவிட கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.

மீண்டும் வர வாய்ப்புள்ளது

இணையத்தில் குறிப்பிட்ட சினிமா படங்களையோ, வெப்சைட்டுகளையோ பதிவிறக்கம் செய்வதை தடை செய்திருந்தாலும், அதில் சிறு மாற்றங்களை செய்து கட்டுப்பாடுகளை உடைத்து, அடுத்த லெவலுக்கு சென்று பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அதனால், அப்படியே இந்த ‘ப்ளூவேல்’ விளையாட்டுக்கான லிங்கை தடை செய்தாலும், அது வெறொரு வடிவத்தில் மீண்டும் வர வாய்ப்புள்ளது. மேலும், இந்த விளையாட்டு வெப்சைட்டாக இல்லை. லிங்க்காக வைத்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் தற்போது கிடைக்கவில்லை.

கேள்விக்குறி

‘ப்ளூவேல்’ விளையாட்டை ஆரம்பித்தவுடனேயே, முதல் நிலையிலே யார் கட்டளையிட்டாலும் உடனே கையை வெட்டி கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு முன் எதுவும் நிலை உண்டா? எங்கிருந்தோ மிரட்டுவதற்கெல்லாம், சாதாரணமாக யாராவது தற்கொலை செய்துவிடுவார்களா? உள்ளிட்ட கேள்விகள் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

ரஷ்யாவில் நவ. 2015- முதல் ஏப். 2016 வரை இந்த விளையாட்டால் 130 பேர் வரை இறந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இந்த விளையாட்டால்தான் இறந்துள்ளார்களா? என்பது பற்றி அந்நாட்டு அரசிடம் உறுதியான, அதிகாரப்பூர்வ தகவல், ஆதாரம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாணவர்களையும், இளைஞர்களையும் காக்க, அந்த விளையாட்டை தேர்ந்தெடுக்கவோ, நெருங்கவிடாமல் தடுக்கவோ விழிப்புணர்வு என்ற தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024