ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம்
Published : 02 Sep 2017 11:51 IST
விருதுநகர்
ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.
ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.
ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.
விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் இரு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.
இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம்., பட்டதாரியான ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகள் காயத்திரி(20) என்பவரையும் வரும் 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.
இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், காயத்திரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், ஒரு இளைஞர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து ராமூர்த்தியின் மாமாவும், மணமகள் ரேணுகாதேவியின் தந்தையுமான அழகர்சாமி மற்றும் உறவினர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்தை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ராமமூர்த்தித்துக்கு ரேணுகாதேவியைதான் திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் அவருக்கு இருதார தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால் முதலில் மனநலம் பாதித்த காயத்திரிக்கு தாலி கட்டிய பிறகு ரேணுகாதேவிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த இருந்ததாகவும், தோஷம் கழிப்பதற்காகவே இருவருக்கு தாலி கட்டி திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமணம் நடத்துவது என மற்றொரு பத்திரிகையை அச்சடித்து வந்து விளக்கக் கடிதத்துடன் கொடுத்தனர். அதைப் பெற்ற சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
ராமமூர்த்திக்கு திருமணம் நடைபெறும்போது அங்கு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறை அலுவலர்களும், போலீஸாரும் தெரிவித்தனர்.
இது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர் கஜேந்திரன் கூறுகையில், இரு மணப்பெண்களும், குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தாலும் சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இது குறித்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment