அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு காலக்கெடு அளிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்காத சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற அரசு உத்தரவு மீதான புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.
மேலும் இது தொடர்பான பொதுநல மனு மற்றும் ரிட் மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
எனவே செப்டம்பர் 6 முதல் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.
No comments:
Post a Comment