Saturday, September 23, 2017

கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த பள்ளி மாணவனின் உடலை வாங்க மறுப்பு



கிரிக்கெட் மட்டை தாக்கி மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவன் உயிரிழந்தான். அவனது உடலை வாங்க மறுத்து சேலத்தில் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 21, 2017, 05:45 AM
சேலம்,

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்-சின்னராசு தம்பதியின் மகன் விஸ்வேஷ்வரன்(வயது13). இவன், விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந் தேதி அங்குள்ள பள்ளி விடுதி மைதானத்தில் சக மாணவர்களுடன் விஸ்வேஷ்வரன் கபடி விளையாடிக்கொண்டிருந்தான்.

அதே மைதானத்தில் பள்ளி ஆசிரியர் குப்புசாமி, சில மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். இவருக்கு சொந்த ஊர் வெண்ணந்தூர் ஆகும். ஆசிரியர் குப்புசாமி பந்தை அடித்தபோது, கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி அருகில் கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவன் விஸ்வேஷ்வரன் தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கியது. இதனால், மாணவன் மயங்கி தரையில் சரிந்தான். அவனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு விஸ்வேஷ்வரன் பின்மண்டையில் தாக்கிய கிரிக்கெட் மட்டையால் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ‘கோமா’ நிலையிலேயே இருந்த அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே விஸ்வேஷ்வரன் உயிரிழந்தான்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சொந்த கிராமத்தில் இருந்து உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு உயிரிழந்த மாணவன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அதன் பின்னர் காலை 11 மணிக்கு, மாணவன் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு உயிரிழந்த விஸ்வேஷ்வரனின் தாயார் சின்னராசு, தாய்மாமா வடிவேல் மற்றும் ஆதிதமிழர் பேரவையினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் குமரேசன்(சேலம் டவுன்), கிருஷ்ணமூர்த்தி(செவ்வாய்பேட்டை), கண்ணன்(அஸ்தம்பட்டி) மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதானம் பேசி, அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அழைத்து சென்றனர். மேலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ், மொளசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

பேச்சுவார்த்தையின்போது உறவினர்கள் தரப்பில் கூறுகையில், மாணவன் விஸ்வேஷ்வரன் கபடி விளையாடவில்லை. பள்ளிக்கூட காம்பவுண்டு சுவரில்தான் உட்கார்ந்திருந்தான். எனவே மாணவன் விஸ்வேஷ்வரனை ஆசிரியர் திட்டமிட்டுத்தான் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தினர். கொலை வழக்கு பதிவு செய்யாவிட்டால் மாணவன் உடலை வாங்கி செல்லமாட்டோம் என உறுதியாக மறுத்தனர்.

அதற்கு போலீஸ் தரப்பில், ஏற்கனவே கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக ஆசிரியர் மீது இ.பி.கோ 338 பிரிவின் கீழ் காயம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது மாணவன் உயிரிழந்து விட்டதால் 304 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்தி மரணம் விளைவித்தல் என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்று விளக்கம் அளித்தனர். ஆனால், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

முன்னதாக சாலை மறியலின்போது மாணவனின் தாயார் சின்னராசு அழுதபடியே கூறுகையில், “என் மகன் எந்த விளையாட்டிலும் ஈடுபடவில்லை. மைதானத்தில் அவன் இருந்தபோது வேண்டும் என்றே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் தாக்கி இருக்கிறார். இந்த ஆசிரியர் புதிதாகத்தான் பள்ளியில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். எனவே, ஆசிரியர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திட வேண்டும். மேலும் ஆசிரியரை உடனடியாக அரசு பணி நீக்கம் செய்ய வேண்டும். ஆஸ்பத்திரியில் என் மகன் இறந்தே 3 நாட்கள் ஆகி விட்டது. செயற்கை சுவாசம் கொடுத்து உயிருடன் இருப்பதுபோல காண்பித்து விட்டனர். என் மகனை கொன்று விட்டனர். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்“ என்றார்.இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, சின்னராசு மயங்கி விழுந்தார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்கனவே, மாணவனை தாக்கியதாக மொளசி போலீசார் ஆசிரியர் குப்புசாமியை கைது செய்தனர். அத்துடன் ஆசிரியர் குப்புசாமியை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணி இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் போராட்டம் காரணமாக குப்புசாமி மீது 304 பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கை மாற்றம் செய்து போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், ஆசிரியர் குப்புசாமி ஜாமீனில் எளிதில் வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மொளசி போலீசார் ஆசிரியர் குப்புசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் உடலை வாங்கிசெல்வதற்கு முதலில் சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு பின் மாணவன் விஸ்வேஷ்வரன் உடலை, டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய தொடங்கினர். ஆனால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கும் பட்சத்தில்தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் தரப்பில் உறுதியாக இருந்தனர். அதனால், விஸ்வேஷ்வரன் உடலை வாங்காமலேயே அனைவரும் ஊர் திரும்பினர். மாணவன் உடல் தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024