Saturday, September 23, 2017



தலையங்கம்

அரசியலில் நடிகர்கள் ஜொலிப்பார்களா?


தமிழக அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல். முன் பெல்லாம் தமிழ்நாட்டில் அரசியலில் நன்கு முதிர்ச்சி பெற்ற, அனுபவம்வாய்ந்த, தியாகம் செய்த தலைவர்களின் கொள்கைப்போர்கள்தான் நடந்தன.

செப்டம்பர் 23 2017, 03:00 AM

தமிழக அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல். முன் பெல்லாம் தமிழ்நாட்டில் அரசியலில் நன்கு முதிர்ச்சி பெற்ற, அனுபவம்வாய்ந்த, தியாகம் செய்த தலைவர்களின் கொள்கைப்போர்கள்தான் நடந்தன. ஏற்கனவே அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் திரை உலகத் தோடு தொடர்புகள் வைத்துக்கொண்டவர்கள் என்றாலும், நடிகர்கள் நாடாள முடியுமா? என்றபோது, முதலில் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தாலும், தொடக்கம் முதலே தி.மு.க.வோடு கொள்கைபிடிப்பில் இருந்து, தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவராகவே அரசியலிலும், சினிமாவிலும் வலம்வந்தார். ஆக, அரசியல் அனுபவத்தோடு, அரசியலில் நுழைந்த எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கி 5 ஆண்டு களில் ஆட்சியை பிடித்தார். அவருக்குப்பிறகு ரசிகர்களின் பேராதரவு கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக், விஜய காந்த், சீமான் என்று எவ்வளவோ பேர்கள் அரசியல் கட்சிகள் தொடங்கினாலும், எம்.ஜி.ஆர். மட்டுமே அரசியல் வானில் சுடர் ஒளிவீசும் நட்சத்திரமாக ஜொலித்தார். ஆட்சியையும் பிடித்து சாகும்வரை முடிசூடா மன்னராகவே இருந்தார். ஜெயலலிதாவும் சினிமா நடிகைதான் என்றாலும், 1982–ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு, சிலஆண்டுகள் கட்சிப்பணியாற்றிய பிறகே முதல்–அமைச்சர் ஆனார்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமா பிரபலங்கள் பெருமளவில் கட்சிகளை தொடங்குகிறார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றி, ஆந்திராவில் மட்டும் என்.டி.ராமாராவ் தனிக்கட்சி தொடங்கி முதல்–மந்திரி ஆனார். மற்றபடி, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ சினிமா துறையில் வெற்றி பெற்றவர்கள், அரசியல் துறையில் நுழையவும் முடிய வில்லை. நுழைந்தாலும் வெற்றியை பெறமுடியவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களான மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் நடிப்பு துறைக்குச் சென்றாலும், அதில் தொடர்ந்து அவர்கள் ஈடுபடவில்லை. இந்தநிலையில், ஜெயலலிதா மரணத் திற்குப்பிறகு கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நுழையப் போவதற்கு அடையாளமாக இவ்வளவு நாளும் சில கருத்துகளை கூறிக்கொண்டே வந்தார். ரஜினிகாந்த் வெளிப்படையாக இன்னும் சொல்லவில்லை. கமல் ஹாசனா, ரஜினிகாந்தா யார் முதலில் வரப்போகிறார்கள்? என்று இருந்தநிலையில், இப்போது கமல்ஹாசன் சில டெலிவி‌ஷன்களுக்கு அளித்த பேட்டியில், ‘தான் அரசிய லுக்குள் நுழையப்போகிறேன்’ என்று சொன்னது மட்டு மல்லாமல், தனிக்கட்சி தொடங்கப்போவதையும் தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். அடுத்த 100 நாட்களில் தேர்தல் நடந்தால் நிச்சயமாக நான் அங்கு இருப்பேன் என்று சொன்ன அவர், இப்போதுள்ள எந்த அரசியல் கட்சிகளோடும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன். தனிக்கட்சிதான் தொடங்குவேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார். இவர் தொடங்கும் கட்சி, ரஜினிகாந்த் கட்சி யோடு கூட்டுவைத்துக்கொள்ளுமா? என்பது குறித்தும் தெளிவான பதிலை சொல்லிவிட்டார். நாங்கள் திரைஉலகில் போட்டியாளர்களாகவே இருந்தோம். அதேபோல், அரசியலிலும் எதிர் எதிராகவே இருக்க விரும்புகிறோம். இருவருக்குமே ஊழலை எதிர்த்து போராடவேண்டும் என்ற ஒரேகொள்கை இருந்தாலும், நான் தனிவழியில் செல்கிறேன். அவர் மற்றொரு வழியில் செல்கிறார் என்று இருவரும் தனித்தனியான கட்சிகளை தொடங்கப் போவதை தெரிவித்துவிட்டார்.

அரசியலில் நுழைந்து முதல்–அமைச்சராக வரத்தயார் என்று கூறி, மக்களை சந்திக்கப்போகிறேன் என்றும் கூறி விட்டார். ரஜினிகாந்த் என்னோடு இணைய சம்மதித்தால், நான் தயார் என்றும் கூறியிருக்கிறார். ஆக, தமிழக அரசியலில் வெகுசில நாட்களில் சினிமா நடிகர்கள் தொடங்கும் 2 புதிய அரசியல் கட்சிகள் உதயமாகப் போகின்றன என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இந்த 2 அரசியல் கட்சிகளில் எது மக்கள் ஆதரவை பெறப் போகிறது?, 2 கட்சிகளுமே எம்.ஜிஆர். தொடங்கியதுபோல மக்கள் ஆதரவோடு ஜொலிக்குமா? அல்லது புகழ்மிக்க தொடக்கத்தைக்கண்டு தொடர்ந்து ஒளிவிடாமல் மங்கிப் போய்விடுமா? என்பதை தமிழக மக்கள்தான் சொல்ல வேண்டும். ரசிகர்களெல்லாம் தொண்டர்களாக எம்.ஜி.ஆருக்கு பின்சென்றதுபோல் மாறுவார்களா? அல்லது ரசிகர்களாக மட்டும் தங்கி இருந்து விடுவார்களா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.








No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024