Friday, February 6, 2015

கேலி செய்தவங்க நல்லாவே இருக்க கூடாது: தற்கொலை செய்த மாணவி உருக்கம்!

திருவண்ணாமலை: என்னை கேலி செய்தவர்கள் நல்லாவே இருக்க கூடாது என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. கூலி தொழிலாளியான இவர்களுடைய மகள் லாவண்யா, ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், லாவண்யா மட்டும் அறையில் இருந்துள்ளார். மாணவிகள் குளித்துவிட்டு வந்து லாவண்யாவின் அறையை தட்டி உள்ளனர். ஆனால் அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக மாணவிகள் எட்டிப் பார்த்தபோது, லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே போளூர் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மற்ற மாணவிகளிடமும் விடுதி காப்பாளரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அந்த அறையை சோதனையிட்டபோது மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது.

அந்த கடிதத்தில், ''அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.

பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேருங்கள். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக் கூடாது. அவர்களை நான் சும்மாவிட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக் கொண்டேன்". எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி. என் சாவுக்கு இந்த பள்ளிக்கும் விடுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது.

இதன் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால் தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளதால், மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024