Friday, February 24, 2017

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!

Published on : 23rd February 2017 02:53 PM  |  
fadnavis_wife

"பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்க்கைக்கு அவர்கள்தான் பொறுப்பு. எந்த ஒரு முடிவானாலும் அதை நீயே தேர்ந்தெடு'' என்று என் கணவர் எனக்கு சுதந்திரமளித்துள்ளார்'' என்று கூறும் அம்ருதா  மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா ஃபட்னவிஸின் மனைவி.  தன் கணவரின் தொகுதியில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பவர், வங்கி நிர்வாகி, 8 வயது மகளின் தாய் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு.
தன் கணவர் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றவுடன், நாக்பூரில் ஆக்ஸிஸ் வங்கி துணைத் தலைவர் பதவியில் இருந்த இவர், மும்பைக்கு இடமாற்றம் கேட்டுப் பெறாமல் வேலையை ராஜிநாமா செய்துள்ளார். தற்போது மாநில அரசு கருவூலத் துறையில் வங்கி நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார். ஒரு முதல்வரின் மனைவி, தன் கணவரின் அரசு நிர்வாகத்தில் வங்கி அதிகாரியாக பணிபுரிவது மிகமிக அபூர்வமான ஒரு நிகழ்வாகும். 
"என்னுடைய 13 ஆண்டுகால வங்கி பணியில் நான் வகித்திராத பதவி இது. இதன் மூலம் மீண்டும் மக்களுடன் தொடர்பு கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா. 
நாக்பூரில் அம்ருதாவின்  பெற்றோர் இருவருமே டாக்டர்கள்  என்பதால்  சிறிய குடும்பமாக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். திருமணமான உடன் எல்லாமே தலைகீழாகிவிட்டது. தேவேந்திர ஃபட்னவிஸின்  குடும்பம் அரசியல் சார்ந்தது என்பதால் அவரது வீட்டில் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வந்து சென்று கொண்டிருந்தனர்.  அந்த சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல எனக்கு ஓராண்டு தேவைப்பட்டது. என்னுடைய கணவர் ஏற்கெனவே எம்.எல்.ஏ வாக இருந்ததால் தொகுதி மக்களின் தேவைகளை எந்த நேரத்திலும் நிறைவேற்றுவதை கடமையாக கொண்டிருந்தார். அவர்  முதல்வரானவுடன் மக்கள் தேவைகளை  கவனிக்க வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். சொந்த பிரச்னைகள் உள்பட கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பது வரை பலவித கோரிக்கைகளை என் கணவர் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் நானே கவனித்து அனுப்புவேன். இதற்காகவே பெரிய பைல் ஒன்றைத் தயாரித்து நானே முடிவெடுத்து பிரச்னைகளை தீர்க்க தொடங்கினேன். இதில் என் கணவருக்கும் உடன்பாடுதான்'' என்று கூறும் அம்ருதா, எம்.பி.ஏ முடித்தவுடன் வரிச் சட்டங்களைப் படித்த பின்னர் ஆக்ஸிஸ் வங்கியில் சேர்ந்தபோது அவரது வயது 23.
திருமணம் என்பது தொழில்துறையை பாதிக்கக் கூடாது என்று கருதியதால், திருமணத்திற்காக தேவேந்திரா பெயரை அம்ருதாவிடம் கூறியபோது தேவேந்திரா தென்மேற்கு  நாக்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். தன் சிநேகிதியின் வீட்டில் அவரை சந்திக்க ஒப்புக் கொண்ட அம்ருதா. பலமுறை அவரைச் சந்தித்து எதிர்காலம் மற்றும் கனவுகளை திட்டமிட்ட பின்னரே 2005- ஆம் ஆண்டு தேவேந்திராவை திருமணம் செய்து கொண்டாராம்.
"தன்னுடைய மனைவி வலிமையுடன் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்புக்கேற்ப நான் அமைந்தது போல், ஒருசில அரசியல்வாதிகளை போலின்றி நேர்மையாக உண்மையானவராக அவர் இருந்தது எனக்கு பிடித்திருந்தது'' என்கிறார் அம்ருதா. பாஜகவில் உயரமான இடத்திற்கு வந்த தேவேந்திரா, 2015 - ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முதல்வரானவுடன் மும்பைக்கு குடியேறிய அம்ருதா, மராட்டிய பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க கணவரது விருப்பப்படியே அரசுத் துறையில் வங்கி நிர்வாகியானார். ""கல்வியும் தன்னிறைவான பணபலமும் இருந்தால் இச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்'' என்பது இவரது கருத்தாகும். கணவரின் தேவைகளை உணர்ந்து பலமான நங்கூரமாக இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தன் கணவருக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டபோது, மாநிலத்தின் தேவைகள் என்ன? எம்.எல்.ஏவாக இருந்தபோது தேவேந்திரா செய்தது என்ன? இனி செய்யப் போவது என்ன? என்பது குறித்து கூட்டத்தில் பேசும் போதெல்லாம் அம்ருதாவின் குரல், அவரது கணவரின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாக கருதி மக்கள் பாராட்டுவார்களாம்.
மாநிலத்தின் முதல் பெண்மணி என்ற முறையில் இவர் அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், உடனடியாக பிரச்னைகளை தீர்ப்பதற்கும் பெண்கள் பாதுகாப்புக்கும் இவரால் மட்டுமே முடியுமென்று மக்கள் கருதுகிறார்கள். இது இவருக்கு உற்சாகமாகவும் புதிய அனுபவமாகவும் இருப்பதால் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் அம்ருதா.
தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்தவே விரும்புகிறேன் என்று கூறினாலும், பிரபலங்களின் மனைவியைப் போன்று கணவர், குழந்தையுடன் சில மணிநேரம் செலவிட முடியவில்லையே என்ற ஏக்கம் அம்ருதாவுக்குள்ளும் இருக்கிறது. எதுவானாலும் போன் தொடர்புதானாம்.
சங்கீதத்தில் நல்ல பயிற்சி பெற்றிருப்பதால், பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி நன்கொடை திரட்டிக் கொடுத்துள்ள அம்ருதாவுக்கு பழைய இந்திப் பாடல்கள், பஜனை, மராத்தி பகவத் கீதை ஆகியவைகளை தனிமையில் அமர்ந்து ரசிப்பது மிகவும் பிடிக்கும். இதற்காக தனியாக ஒரு அறையை  அமைத்து நேரம் கிடைக்கும் போது அங்கு செல்வதுண்டாம். தேவேந்திராவுக்கும் கவிதை எழுதவும், இசை அமைக்கவும் தெரியும் என்பதால் சில சமயங்களில் அபூர்வமாக இருவரும் சேர்ந்து  பாடுவதும் உண்டாம். பரபரப்பான அரசியல் வாழ்க்கையில் ஓரளவு நேரம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா. 
- பூர்ணிமா

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...