குறள் இனிது: பிரிக்கணும்.. தடுக்கணும்.. இழுக்கணும்..!
நீங்க ஜியோ சிம் வாங்கியாச்சா? காசே போடாமல் குஷியாகப் பேசுகிறீர்களா? செலவே இல்லாத இணைய சேவையையும் அனுபவிக்கிறீர்களா? ஜாலிதான்! ஆனால் இது வெகுநாட்கள் தொட ராதே என்கிற கவலையும் இருக்குமே?
அது சரி. ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் இப்படி வாரி வழங்குகிறது என எண்ணமும் வருமே! இதுவும் ஒரு வியாபார தந்திரம் தானே? சற்றே சிந்திக்கணும்.விற்பனை பெருக முதல் படி என்ன? புதுசு புதுசா வாடிக்கையாளர்களைச் சேர்க்கணுமில்லையா? முதல்ல காசு வாங்காவிட்டாலும், பின்னாடி பார்த்துக்கலாம்ல?
ஜியோ இணைப்பு வாங்காதவர்கள் யாரும் கைபேசி இல்லாமல் இருப்பார்களா என்ன? அவர்களும் ஏதாவது சிம் வாங்கிப் பேசிக் கொண்டுதானே இருப்பார்கள்? அப்ப அவர்களை முதலில் அங்கிருந்து கழட்டிக்க வைக்கணுமில் லையா? அதற்கு எளிதான வழி காசு ஏதும் கேட்காமல் சிம் கொடுத்துப் பேச விடுவதுதானே? எந்த ஒரு விற்பனையிலும் இந்த அணுகுமுறை பலன் தருமல்லவா?
வாடிக்கையாளர்களை அதிகரிக்க மூன்று வழிகள் இருக்குங்க. ஒன்று, அவர்களை போட்டியாளர்களிடமிருந்து பிரித்து நம்மகிட்ட கொண்டு வந்துடணும்!
இரண்டாவது வழி முக்கியமானது. உங்களிடம் ஏற் கெனவே உள்ள வாடிக்கையாளர்களை இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையா பின்னே? உங்கள் போட்டியாளர்களும் உங்களைப் போலவே மற்ற வங்க மடியில கை வைக்க முயற்சிக்கலாம் இல்லையா? அதனால் தானேங்க ஏர்டெல், வோடபோன் போன்றவர்கள் ஜியோவிற்குப் பின் இப்ப திடீரென்று நிறைய சலுகைகளை அள்ளித் தருகிறார்கள்?
அண்ணே, ஒரு புதிய வாடிக்கையாளரை உருவாக்குவதற்கு, ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஆகும் செலவைப் போல ஐந்து மடங்கு வரை ஆகலாம் என ஆய்வுகள் சொல்கின்றனவே!
இல்லாததைத் தேடும் முன்பு இருப்பதை விட்டு விடக் கூடாதில்லையா? மூன்றாவது வழி, பலரும் செய்ய மறந்து விடுவது. ஆமாம், ஏற்கெனவே உங்களிடம் இருந்து விட்டு, உங்கள் போட்டியாளர்களிடம் சென்றவர்களை மீண்டும் உங்களிடமே வரவழைப்பது!
வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளைப் புரட்டிப் பார்த்து, அந்த வாடிக்கையாளர்களை மீண்டும் தமது சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதுண்டே! புதிதாக வாடிக்கையாளரைத் தேடி அலைவதை விட, நமக்குத் தெரிந்தவரை, நம்மைத் தெரிந்தவரை ஈர்ப்பது தானே எளிது, நல்லது?
பகைவருக்குத் துணையானவரைப் பிரித்தலிலும், தம்மிடம் உள்ளவரை தம்மை விட்டுப் போகாமல் காத்தலிலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதிலும் வல்லவனே அமைச்சன் என்கிறார் வள்ளுவர்.
வாடிக்கையாளர்களை அதிகரிக்க முயலும் மேலாளர்களுக்கும் இது பொருந்தும்!
- somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment