சிந்தனைக் களம் » தலையங்கம்
அரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயதுச் சிறுமி நந்தினி சிந்திய ரத்தக் கறை இன்னும் மறையாத நிலையில், அடுத்த அதிர்ச்சிகரமான பாலியல் கொலை ஒன்றைச் சந்தித்திருக்கிறது தமிழகம். சென்னை, மதநந்தபுரத்தைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
சில நாட்களுக்கு முன்னர், குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி காணாமல்போயிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்துவந்த போலீஸார், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் தஷ்வந்த்தை விசாரித்தபோது, நடந்து முடிந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்தச் சிறுமியைத் தனது வீட்டில் வைத்துப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதுடன், கொன்று, பின் உடலை தாம்பரம் புறவழிச் சாலையோரம் கொண்டுசென்று பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார் தஷ்வந்த். அவர் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டபோது, அப்பகுதி மக்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றிருப்பது, மக்களிடத்தில் இது தொடர்பில் உள்ள கொந்தளிப்பான மன வேதனையையும் வலியையும் ஆற்றாமையையும் உணர்த்தக் கூடியது. ஆனால், இந்தக் கொந்தளிப்பும் வலியும் கண நேரத்தில் மறந்துவிடக் கூடாதவை. ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் அவை தீயாகப் பரவ வேண்டும். இந்தியாவில் 2015-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 94,172. இதில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 3,350. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
பொதுவாக, பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அவர்கள் அணியும் உடை, பழக்கவழக்கம் உள்ளிட்ட உளுத்துப்போன, அர்த்தமற்ற விஷயங்களையே காரணங்களாகச் சுட்டிக்காட்டி, தன்னுடைய குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முற்படும் ஆணாதிக்கச் சிந்தனைச் சமூகம், இந்தத் தருணத்திலேனும் தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள முற்பட வேண்டும். ஏழு வயதுக் குழந்தை கொடூரமாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்?
வயது வித்தியாசமின்றிப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஆணாதிக்கம், பெண்ணை ஒரு சகஜீவியாகக் கருதாத துச்சத்தனம், பாலியல் ஆதிக்க உணர்வு என்று பல விஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவு அசிங்கங்களிலிருந்தும் நாம் விடுதலை அடைய வேண்டியிருக்கிறது. இதில் முதல் மாற்றம் சமூகத்தை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து தேவைப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தமிழகக் காவல் துறை இப்படியான வழக்குகளைப் போகிறபோக்கில் கையாள்வது மிக மோசமான போக்கு. நந்தினி கொலை வழக்கிலேயே கடுமையான அழுத்தங்களுக்குப் பிறகே காவல் துறை தன் நடவடிக்கைகளைத் தொடங்கியது இங்கு குறிப்பிட வேண்டியது. சமூகம் சாதாரணமாகக் கடக்கும் ஒவ்வொரு குற்றமும் அடுத்து நூறு குற்றங்களுக்கான தோற்றுவாயாக அமைந்துவிடும்!
No comments:
Post a Comment