அம்பாசிடரை வாங்கிய பியூஜியோ
இந்திய கார் சந்தையில் அம்பாசிடர் காருக்கென்று தனி இடம் உணடு. சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டின் பிரதமரும் குடியரசுத் தலைவரும் பயணித்தது அம்பாசிடர் காரில்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் உற்பத்தியை சி.கே. பிர்லா குழுமத்தின் அங்கமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டது இருப்பினும் அம்பாசிடர் என்ற பிராண்டை அந்நிறுவனம் தன்னகத்தே வைத்திருந்தது. 1958-ம் ஆண்டு முதல் அம்பாசிடர் கார் உற்பத்தி செய்யப்பட்டது. புதிய பிராண்டுகளின் வரவு உள்ளிட்ட பல காரணங்களால் அம்பாசிடர் காரின் விற்பனை சரிந்தது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு கார் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது அம்பாசிடர் பிராண்டை பிரெஞ்சு நிறுவனமான பியூஜியோ வாங்கியுள்ளது. பிராண்டு பெயர் மட்டும் ரூ.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்பாசிடர் பிராண்டு பெயர் மற்றும் டிரேட் மார்க் ஆகியவற்றையும் பியூஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் தொகையில் நிறுவனத்தின் கடன் சுமை மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு ஈடு செய்யப்படும் என்று பிர்லா குழுமம் தெரிவித்துள்ளது.
1960 மற்றும் 1970-களில் அம்பாசிடர் கார் நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கும் வாகனமாக இருந்தது. ஏறக் குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் கோலோச்சிய அம்பாசிடர் கார், மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
நவீன வடிவமைப்பில், மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு புதிய ரக வாகனங் கள் வந்தபோது, பழைய பாணியிலேயே கார்களைத் தயாரித்தது அம்பாசிடர் நிறுவனம். இதுவும் கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டதற்கு முக்கியக் காரணமாகும். ஆண்டுக்கு 24 ஆயிரம் கார்கள் வரை விற்பனையான அம்பாசிடர் 2014-ம் ஆண்டில் மொத்தமே 2,400 கார்கள்தான் விற்பனையானது. இதைத் தொடர்ந்து அதன் உற்பத்தியை நிறுத்த பிர்லா குழுமம் முடிவு செய்தது.
இப்போது அம்பாசிடர் பிராண்டை வாங்கியுள்ள பியூஜியோ நிறுவனம் அதே பெயரில் இந்தியச் சந்தையில் காரைத் தயாரிக்கப் போகிறதா என்ற விவரத்தை வெளியிடவில்லை.
அம்பாசிடர் கார் தயாரித்து வந்த உத்தர்பாரா தொழிற்சாலைதான் ஆசிய பிராந்தியத்தில் மிகவும் பழமையான ஆலையாகும். இந்த ஆலை 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1990களில் பியூஜியோ தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. பியூஜியோ 309 கார்கள் பிஏஎல் நிறுவனத்தில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கார் விற் பனை நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் 2018-ம் நுழையத் திட்டமிட்டுள்ளதாக பியூஜியோ நிறு வனம் அறிவித்தது. இதற்காக சென் னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள ஆலையில் காரைத் தயாரிக்க சிகே பிர்லா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்தது. திருவள்ளூரில் உள்ள ஆலையில் மிட்சு பிஷி கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு 12 ஆயிரம் கார்களைத் தயாரிக்கிறது.
அம்பாசிடர் பிராண்ட் மீண்டும் இந்தியச் சாலையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது பியூஜியோ.
No comments:
Post a Comment