தீர்ப்பு எதிரொலி... அடுத்த முதல்வரை கை காட்டினார் சசிகலா!
உச்ச நீதிமன்றத்தில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த முதல்வராக செங்கோட்டையனை அவர் கை காட்டி இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.
அ.தி.மு.க உள்கட்சி பூசலில் சசிகலாவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பன்னீர்செல்வம் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் தீர்ப்பு குறித்தும் அவர் உருக்கமாக பேசி உள்ளார். 'தீர்ப்பு எனக்கு பாதகமாக வந்தாலும் அக்கா காட்டிய வழியில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அப்போது, சசிகலாவின் கண்கள் கலங்கின. அதற்கு சசிகலாவின் விசுவாசி எம்.எல்.ஏ.க்கள் 'தீர்ப்பு நிச்சயம் நமக்கு சாதகமாகத்தான் வரும்' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து சசிகலாவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர். சட்ட நிபுணர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் ஒருவேளை தீர்ப்பு எனக்கெதிராக வந்தால் அடுத்து என்ன செய்யலாம், யார் அடுத்த முதல்வர் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாய்ஸில் சசிகலாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையனை சசிகலாவும், மன்னார்குடி தரப்பும் கை காட்டி இருக்கிறது. செங்கோட்டையன் முதல்வர் என்றதும் அவருக்கு எதிரணியில் இருப்பவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் அதை வெளிக்காட்டவில்லை. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலாவும், அவரது தரப்பினும் கடும் வருத்தத்தில் உள்ளனர். இக்கட்டான இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கூவத்தூரில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்தின் அணிக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அவர்களிடம் சசிகலா தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். தீர்ப்பு வருவதற்கு முன்பே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலிருக்க கூவத்தூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் பிரச்னை ஏற்படாமலிருக்க போலீஸார் தயார் நிலையில் இருக்கின்றனர். ரிசார்ட்டுக்குள் இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர் எம்.எம்.ஏ. ஒருவர் கூறுகையில், "தீர்ப்பு எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களிடம் ஒற்றுமையில்லை என்ற தகவலை பன்னீர்செல்வத்தின் தரப்பு பரப்பி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் சின்னம்மா தலைமையில் செயல்படுவோம்" என்றார்.
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருவதாக சொல்லியும் அவர்களை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியில் விட வேண்டும். ரிசார்ட்டுக்குள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. முதல்வராக பன்னீர்செல்வமே தொடருவார்" என்றனர்.
-எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment