Monday, February 13, 2017

vikatan.com

எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதிக்கு போன் செய்தால், என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
தமிழக அரசியல் தற்போது மையம் கொண்டிருப்பது கூவத்தூரில்தான். சசிகலா அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஓ.பி.எஸ் அணிக்குப் போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறது சசிகலா குடும்பம். இதற்காக அவர்கள் எடுத்த பல அஸ்திரத்தில் ஒரு அஸ்திரம்தான், எம்.எல்.ஏ-கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டாக, நினைத்த காரியம் கைகூடும் வரை வைத்திருப்பது.



அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கணும். அதுவும் கூப்பிட்டதும் ஓடி வரும் தூரத்தில் இருக்கணும். சென்னை சிட்டிக்குள்ளேயும் இருக்கக் கூடாது. அதே சமயம் பத்திரிகையாளர்களும் சுலபமாக எம்.எல்.ஏ-களைப் பார்த்துவிடக் கூடாது. இப்படி ஏகப்பட்ட செக் லிஸ்ட் வைத்து கடைசியில் டிக் அடித்த இடம்தான்.. கூவத்தூரில் உள்ள இந்த 'கோல்டன் பே ரிசார்ட்’. சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், போயஸ் கார்டனில் இருந்து சரியாக 77.5 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இந்த 'கோல்டன் பே’ ரிசார்டில் 34 ரூம்கள் இருப்பதாகவும், 'ஸ்பா', 'நீச்சல் குளம்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதாகவும், இந்த ரிசார்டின் வலைதளம் தெரிவிக்கிறது. இங்குதான் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க - எம்.எல்.ஏ-கள் கடந்த சில நாட்களாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ் மெரினாவில் அமர்ந்த நள்ளிரவே, அனைத்து எம்.எல்.ஏ-களையும் போயஸ் இல்லத்துக்கு அழைத்தவர்கள். 'நீங்க அனைவரும் சின்ன அம்மா. முதல்வாரகும்வரை கூட்டாக இருக்கணும். ஒற்றுமையாக இருக்கணும். சின்னம்மாவுக்கு துரோகம் செய்ய நினைத்தால். அது அம்மாவுக்கு செய்யும் துரோகம்.' என எம்.எல்.ஏ-களுக்கு கிளாஸ் எடுத்துதான் இந்த ரிசார்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள். முதலில், எம்.எல்.ஏ-வின் உதவியாளர்களுக்கும் தடை போட்டவர்கள். அப்புறம் அவர்களை மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள். இந்த ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-கள் மட்டும் தங்கி இருக்க... இதன் அருகில் உள்ள சில ரிசார்ட்களில்தான் அமைச்சர்கள் தங்கி இருக்கிறார்கள்.

'கோல்டன் பே' ரிசார்ட்டின் ரூம் வாடகை நாலாயிரம் ரூபாயில் இருந்து ஒன்பதாயிரம் வரையிலும் உள்ளது. முதலில் சென்ற எம்.எல்.ஏ-களுக்கு விலை உயர்ந்த ரூம்கள் கொடுக்கப்பட, அதன்பின் வந்தவர்களுக்கு குறைந்த விலை ரூம்களை கொடுத்திருக்கிறார்கள். இதில் அப்செட் ஆன சில எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும்தான் அருகில் உள்ள வேறு சில இடங்களில் ரூம் எடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மகாபலிபுரம் கடற்கரையில் இருந்து கூவத்தூர் வரை பல ரிசார்ட்களிலும் தற்போது ரூம் எடுத்து தங்கி இருப்பது இந்த சசி அணியின் கரைவேட்டிகள் தானாம்.



கடந்த 10-ம் தேதி முதலே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-கள் கருத்து தெரிவித்து அவருடன் இணைந்தார்கள். இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகாரிக்கலாம் என்று எண்ணியவர்கள். இதைத் தடுக்க சசிகலாவை எம்.எல்.ஏ-கள் மத்தியில் உரையாற்ற வைக்கலாம் என திட்டம்போட்டார்கள். அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கடந்த 11-ம் தேதி மதியம் போயஸ் இல்லத்தில் இருந்து கிளம்பி கூவத்தூர் சென்றார் சென்றார் சசிகலா. தொடர்ச்சியாக அடுத்தநாளும் அங்கு சென்றவர், 'நாங்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகத்தான் உள்ளார்கள். நீங்களே பாருங்கள்.' என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உணர்ச்சி பொங்க பேசினார் சசி.

எம்.எல்.ஏ-க்கள் இந்த ரிசார்ட்டில் சுதந்திரமாக உலாவலாம். இதைத் தாண்டி வெளியில் சென்று சுதந்திரமாக சுற்ற முடியுமா என்பதுதான் கேள்வியே. இதற்கு இடையில், 'கோல்டன் பே' ரிசார்ட் நம்பரை பரப்பி... 'இந்த சொகுசு விடுதியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவரவர் தொகுதி எம்.எல்.ஏ-வின் பெயரைச் சொல்லி, அவருடன் பேச வேண்டும் எனக் கூறி, அவர் தங்கி இருக்கும் அறைக்கு இணைப்பு கொடுக்கச் சொல்லுங்கள். இணைப்பு கிடைத்தவுடன் அவருடன் கனிவுடன் பேசுங்கள். சசிகலா மீது உள்ள கோபத்தைக் காட்ட வேண்டாம். நண்பர்களே...' என வைரலாக்கிவிட்டனர்.



நாமும் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டோம். மூன்று எம்.எல்.ஏ-கள் பெயர் சொல்லி அவர்கள் தங்கி இருந்த அறைக்கு இணைப்பைக் கொடுக்கச் சொன்னோம். இணைப்பைத் தர மறுத்தவர்கள். "சார், நீங்க எதுவாக இருந்தாலும். அவர்கள் தனிப்பட்ட நம்பரைத் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுக்கு எம்.எல்.ஏ-கள் பெயர் எல்லாம் தெரியாது. இங்க யார் வர்றா... யார் போறா போன்ற எந்த தகவல்களும் எங்களுக்குத் தெரியாது. இதைக் காண்காணிக்கவே கட்சிக்காரங்க சிலர் இருக்காங்க." என்றார்.

"யார் அவங்க?" என்ற கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்தவர்களிடம். "சரி, கடைசியாக கரூர் எம்.எல்.ஏ விஜய் பாஸ்கர் தங்கி இருக்கும் அறைக்கு லைனை கொடுங்க' என்றோம். "சார், சில முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும். எங்களுக்கு அருகில் உள்ள வேறு ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார்கள். அந்த ரிசார்டுக்கு போன் போடுங்க.' என போனை துண்டித்துவிட்டார். அந்த ரிசார்ட்டுக்கு பல முறை போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. சரி, விஜய் பாஸ்கர் தனிப்பட்ட எண்ணுக்குக் கூப்பிட்டபோதும் அது 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது. ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-களும் நிலையும் இதுதான்.

மொத்தத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-களின் நிலைமைதான்... கடந்த மூன்று நாட்களாக.. தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது, விரைவில் தொடர்பு எல்லைக்குள் வருவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...