Monday, February 13, 2017

இளமை.நெட்: காதலர் தினத்துக்கு இளையராஜாவின் பரிசு!

சைபர் சிம்மன்

இசைப் பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேகச் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. 'மேஸ்ட்ரோஸ் மியூசிக்' எனும் இந்தச் செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வச் செயலி என்பதுதான் இன்னும் விசேஷமானது. இந்தப் பிரத்யேகச் செயலிக்கான அறிவிப்பை இளையராஜாவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

காதலர் தினத்துக்கு இதைவிடச் சிறந்த பரிசு வேறு என்ன வேண்டும்..?

இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ எனப் பலவாறாகப் போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்ததுதான். ராஜாவின் இசை ஊக்கமளிக்கும் தாலாட்டாக, சோகங்களிலிருந்து ஆறுதல் அளிக்கும் மருந்தாக, உள்ளத்தை உற்சாகத்தில் ஆழ்த்தும் உத்வேக இசையாக எனப் பலவிதங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. மணிக்கணக்கில் இளையராஜா பாடல்களைக் கேட்டு மெய் மறந்திருக்கும் ரசிகர்கள் அநேகம் பேர்.

யூடியூப் தளத்தில் அதிகம் கேட்டுப் பகிரப்படும் பாடல்களாக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அமைந்துள்ளன. ‘சவுண்ட் கிளவுட்' உள்ளிட்ட தளங்களிலும் அவரது பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். ஸ்மார்ட்போனில் கேட்டு ரசிக்கும் வகையில் இளையராஜா பாடல்களுக்காக என்று பல செயலிகளும் இருக்கின்றன.

இந்நிலையில், இளையராஜா தனது ரசிர்களுக்காக என்று பிரத்யேகச் செயலியை உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். "என்னுடைய முதல் அதிகாரபூர்வச் செயலிக்கு வரவேற்கிறேன்” என்று திங்கள்கிழமை அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இளையராஜா, அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். "இனி உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள், இசைத்திருட்டு இல்லாமல் எனது இசையை உள்ளங்கையில் அணுகலாம்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தச் செயலி மூலம் த‌ன்னுடன் தொடர்புகொள்ளலாம் என்றும் இசை உருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியான சில மணி நேரங்களில், ரசிகர்கள் உற்சாகமாகி ஆயிரக்கணக்கில் ‘லைக்' இட்டிருந்தனர். எண்ணற்றவர்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ளவும் செய்தனர். பல ரசிகர்கள், இது போன்ற ஒரு செயலியைத்தான் எதிர்பார்த்திருந்தோம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வடிவங்களில் வெளியாகியுள்ள இந்தச் செயலி தொடர்பானத் தகவல்களை அளிக்கத் தனி இணையதளமும் (http://www.maestrosmusic.net/) உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இளையராஜா ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கும் வகையில் செயலி அமைந்துள்ளது. எளிமையான வடிவமைப்பு கொண்டுள்ள செயலியில் ராஜாவின் இசையைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் அணுக முடிகிறது. இந்தச் செயலியை முழுமையாகப் பயன்படுத்த இதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஃபேஸ்புக் அல்லது கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து உறுப்பினராகலாம். அல்லது மொபைல் எண் மூலம் உறுப்பினராகலாம்.
இளையராஜா இசையில் உருவான தனிப் பாடல்கள், கர்நாடக இசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, வாத்திய இசை, காதல், துடிப்பான பாடல்கள், சோகப் பாடல்கள், மேற்கத்திய பாணி மற்றும் மெல்லிசைப் பாடல்கள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தேவையான பகுதியை கிளிக் செய்து பாடல்களைக் கேட்கலாம். பாடல்களைக் கேட்கவும், தரவிறக்கம் செய்யவும் வசதி இருக்கிறது. பாடல்களை நண்பர்களுடன் பகிரவும் முடியும்.

இவை தவிர, மேஸ்ட்ரோஸ் வழங்குவது, முன்னணியில் உள்ள பாடல்கள், வாரத்தின் சிறந்த பாடல், மாதத்தின் இனிமையான குரல் ஆகிய தலைப்புகளின் கீழும் தேர்வுகள் இருக்கின்றன. செயலி அறிமுகமான இந்த நேரத்தில், மாதத்தின் இனிய குரலாக சின்னக்குயில் சித்ரா ஈர்க்கிறார். வாரத்தின் சிறந்த பாடலாக 'நான் மகான் அல்ல' படத்தின் 'மாலை சூடும் வேளை’ பாடல் அமைந்துள்ளது. மேலும் கமல் விருப்பங்கள், தனுஷ் விருப்பங்கள் உள்ளிட்ட பிரபலமான தேர்வுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இளையராஜா இசையமைத்த படங்களிலிருந்து எளிதாகப் பாடல்களைத் தேர்வு செய்ய விரும்பும் ரசிகர்கள் கவலைப்படவே வேண்டாம். இதற்காக என்றே ‘நூல‌கம்' பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அவரது இசையில் உருவான படங்கள் அனைத்தும் அகர வரிசைப்படி வரவேற்கின்றன. விரும்பிய படத்தைத் தேர்வு செய்து அதில் உள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம். திரைப்படங்களின் பாடல் ஆல்பத்தின் முகப்புப் படங்கள் திரை நினைவுகளில் மூழ்க வைக்கின்றன.
முகப்புப் பக்கத்தின் மேல் பகுதியிலேயே இளையராஜாவின் இணைய வானொலியையும் கேட்டு ரசிக்கலாம். பாடல்களைக் குறிப்பிட்டுத் தேடும் வசதியும் இருக்கிறது. இதில் விருப்பத் தேர்வுகளைக் கொண்ட பாடல்கள் பட்டியலையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

தீவிர இளையராஜா ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய வ‌கையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் செயலி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், ரசிகர்கள் உற்சாகமான‌ கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். பலரும் இந்தச் செயலிக்காக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

செயலியின் வடிவமைப்பு பரவலாகப் பாராட்டப்பட்டாலும், ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பு தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இன்னும் பிரத்யேகமான தேடல் வசதி தேவை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அறிவிக்கை வசதி தேவை என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வேற்று மொழிப் பாடல்களையும் எளிதாக அணுகும் வசதி தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மொத்த‌த்தில் இளையராஜா ரசிகர்களை இந்தச் செயலி உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தச் செயலியில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேலும் மெருகேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: 
http://www.maestrosmusic.net/
http://bit.ly/2jXHQSi

No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...