Wednesday, February 15, 2017

நாற்காலி சண்டை: ஆளுநர் அழைக்கப் போவது யாரை?

By DIN  |   Published on : 14th February 2017 09:21 PM  |     
tamilnadu

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது.  அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். தன்னை கட்டாயப் படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என பகிரங்கமாக சசிகலா தரப்பு மீது புகார் அளித்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிகழத் தொடங்கியது. 
அதுமட்டும் இன்றி சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிளவு பட்டது. இந்நிலையில் மணிக்கொரு பரபரப்புச் செய்தி வெளியாக தொடங்கியது. இந்நிலையில் இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்த முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக இருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இன்றைய தீர்ப்பில் சசிகலாவுக்கு இணையான தண்டனையை பெற்றுள்ளனர்.  இன்று வெளியான தீர்ப்புக்குப் பின்னர், தனது நம்பிக்கைக்கு உரிய எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவுக்கான சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்தார். அதன்பிறகு இன்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். 

இதற்கிடையில்  முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளிப்போரின் எண்ணிக்கை ஒன்றொன்றாக அதிகரித்து வந்தது. இதையடுத்து சசிகலா தரப்பினர் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி தன் தரப்பு ஆதரவை உறுதி செய்து கொண்டார். அவர்களை யாரும் கலைத்து விடாமல் இருக்க கூவத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இருந்த போது ஒரு சிலர் அங்கிருந்தும் தப்பி வந்து ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். அதே போல் எம்.பிக்களின் ஆதரவும் பெருக தொடங்கியது. 
இந்நிலையில்  எடப்பாடி தலைமையிலான அணிக்கு சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க அழைப்புவிடப்படுமா? அல்லது எம்.எல்.ஏ.க்களை ஜனநாயக ரீதியில் ஆளுநர் அழைத்து பேசுவாரா? என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஆளுநரின் செயல்களில் இனி தாமதம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
சட்டப்பேரவை கூடுவதற்கு முதல்வர் பன்னீர் செல்வம் அழைப்பு விட வேண்டும்  இதையடுத்து கூடும் கூட்டத்தில் எந்த அணி அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கிறதோ அந்த அணியில் இருந்துதான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சட்டப் பேரவை கூட்டத்தைக் கூட்டி, ரகசிய வாக்கெடுப்பு, அதாவது, தான் விரும்பும் முதல்வரின் பெயரை உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம் என்ற கருத்தும் மேலோங்கி நிற்கிறது. இதையேதான் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் தெரிவித்து இருந்தார். என்றாலும் ஆளுநர் முடிவே முக்கியமானதாகும். ஆளுநரின் முடிவுக்காகவே நாடும் நாட்டு மக்களும் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...