Monday, February 13, 2017

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் ஆளுநர்!

By பழ. நெடுமாறன்  |   Published on : 13th February 2017 02:00 AM  |   
இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் காணாத அரசியல் குழப்பநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆளுநராக இருந்த ரோசய்யா, பதவிக் காலம் முடிந்து கடந்த 2016 ஆகஸ்டு 30-ஆம் தேதி விலகிச் சென்றார். மராட்டிய மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் ஆகஸ்டு 31-ஆம் தேதி தமிழக ஆளுநர் பொறுப்பையும் தாற்காலிகமாக ஏற்றார்.
செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்வர் செயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமாகிறார். முதல்வர் உடல் நலமுடன் இருந்தபோதே நிரந்தர ஆளுநர் தொடர்பாக அவருடன் பேசி நியமித்திருக்
கலாம்.
ஆனால், இந்த சூழ்நிலையை தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு கடந்த 5 மாத காலமாக தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதன் விளைவாக சட்டப்படி நடக்க வேண்டிய பல வேலைகள் தடைப்பட்டுக் கிடக்கின்றன.
தமிழ்நாட்டில் நான்கு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவது தடைபட்டுக் கிடக்கிறது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. காலியான பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
நிரந்தர ஆளுநர்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க முடியும். இதன் விளைவாக நான்கு பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது. தமிழக அரசிலும் பல்வேறு பணிகள் முடங்கிவிட்டன.
உச்சக் கட்டமாக குடியரசு நாளில்கூட தமிழகத் தலைநகரில் கொடியேற்றுவதற்கு ஆளுநர் இல்லை. அவர் மும்பையில் கொடியேற்ற வேண்டிய நிலை இருந்தது. எனவே தமிழகத்தில் கொடியேற்ற வேண்டிய நிலை உருவானது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்புகிறார்.
ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த ஏற்பாடு செய்யப்படும் வரை தாற்காலிக முதலமைச்சராக பதவியில் தொடருமாறு சொல்லிவிட்டு மும்பையிலேயே தங்கியிருக்கிறார்.
பிப்ரவரி 5-ஆம் நாள் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 135 பேரும் - தாற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட - கையெழுத்திட்டு சசிகலாவை தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். முறைப்படி இதற்கான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் சசிகலாவை முதல்வராக பதவியேற்கும்படி கூறியிருக்க வேண்டும்.
ஆனால், அந்தக் கடிதத்தைப் பெறுவதற்குக்கூட ஆளுநர் தமிழ்நாட்டில் இல்லை. மும்பையில் இருந்து தில்லிக்கு பறந்து சென்றுவிடுகிறார். நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி 9-ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தின் ஆளுங்கட்சியில் முக்கியமான மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் உடனடியாகச் சென்னைக்குத் திரும்ப வேண்டிய ஆளுநர் திரும்பாமல் திட்டமிட்டே தாமதிக்கிறார்.
இந்த நான்கு நாள்கள் தாமதத்தின் விளைவாக தமிழக அரசியலில் குழப்பம் உருவானது. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த பன்னீர்செல்வம் மன மாற்றம் அடைகிறார். தனக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறுகிறார்.
தமிழக அரசியலை முன்பு எப்போதுமில்லாத பரபரப்பு கவ்வுகிறது. பன்னீர்செல்வத்தின் மனமாற்றத்திற்கு பின்னணியில் யார் என்ற கேள்வி எழுகிறது. பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன.
கட்சித் தலைவர்கள், ஆதரவாகவும், எதிராகவும் நிலையெடுக்கிறார்கள். பன்னீர்செல்வம், தான் நிர்பந்தத்திற்கு ஆளாகியதால் பதவி விலகல் கடிதம் கொடுத்ததாகவும் அதை திரும்பப் பெறப் போவதாகவும் கூறியுள்ளதை ஆளுநர் பரிசீலனை செய்வாரேயானால், சட்டப்படி அது செல்லாதது ஆகும்.
பதவி விலகல் கடிதத்தை கொடுத்த நேரத்திலோ அல்லது அக்கடிதத்தின் மீது ஆளுநர் முடிவெடுத்து ஆணைபிறப்பிப்பதற்கு முன்போ பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியிருந்தால் ஆளுநர் அதை பரிசீலிக்கலாம். ஆனால் அவரின் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் அதை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. அதை ஏற்றுக்கொண்ட ஆளுநரும் திரும்பக் கொடுக்க முடியாது.
அத்தகைய முடிவெடுக்கும் அதிகாரமும் ஆளுநருக்குக் கிடையாது. மேலும் தாற்காலிக முதல்வரின் பதவிக்காலத்தை தான் விரும்பும் காலம் வரை நீட்டிக்கும் அதிகாரமும் ஆளுநருக்குக் கிடையாது.
"2016-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த மக்கள் சசிகலாவிற்காக வாக்களிக்கவில்லை. கொல்லைப்புற வழியில் முதல்வர் பதவியில் அமர்வதற்கு சசிகலா முயலுகிறார்.
ஓராண்டு கழிவதற்குள் மூன்று முதலமைச்சர்களா' என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் எழுப்பி இருக்கிறார். சனநாயக முறையில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். அக்கட்சியில் பெரும்பான்மை ஆதரவு பெறுபவர் முதலமைச்சர் ஆகிறார். இந்த அடிப்படை உண்மையைக்கூட ஸ்டாலின் போன்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அண்ணா சட்டப்பேரவைக்கே போட்டியிடவில்லை. நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தி.மு.க. அவரை தலைவராகத் தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கியது.
அவரது மறைவிற்குப் பிறகு தாற்காலிக முதலமைச்சராக இரா. நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார். அவர் அந்தப் பதவியில் தொடர அனுமதிக்கப்படவில்லை. கட்சி மு. கருணாநிதியை தலைவராகத் தேர்ந்தெடுத்தது. எனவே அவர் முதலமைச்சர் பொறுப்பேற்றார்.
கருணாநிதி முதலமைச்சராக ஆவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவர் கொல்லைப்புற வழியில் முதலமைச்சராக முயற்சிக்கிறார் என்று யாராவது கூறியிருந்தால் அது சனநாயக நடைமுறைகளை புரிந்துகொள்ளாத போக்கு ஆகும்.
நாடாளுமன்ற சனநாயகத்தில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கே வாக்களிக்கிறார்கள். கட்சியினர் கூடி தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது அக்கட்சியினரின் சனநாயக உரிமையாகும். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்தத் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அதுதான் நடைமுறை.
இதைப் புரிந்துகொள்ளாமல் குட்டையை குழப்பி மீன்பிடிக்க முயல்வது ஒருபோதும் வெற்றிபெறாது. பெரும்பான்மை உள்ள ஒரு கட்சியின் தலைவரை முதல்வர் பதவியேற்க அழைப்பதும் அவருக்கு பதவி ஏற்பு உறுதிமொழி செய்துவைப்பதும் ஆளுநரின் கடமையாகும். அத்துடன் அவரின் பணி முடிவடைந்துவிடுகிறது.
சட்டப்பேரவையில் தனக்குள்ள பெரும்பான்மையை அக்கட்சித் தலைவர் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும். அப்போது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் படைத்தவர் பேரவைத் தலைவர் மட்டுமே. குரல் வாக்கெடுப்பா அல்லது கைகளைத் தூக்கி காட்டும் வாக்கெடுப்பா என்பதை பேரவைத் தலைவர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநர் அதில் தலையிட
முடியாது.
இரகசிய வாக்கெடுப்பு என்பது குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் நாடாளுமன்ற மேலவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் மட்டுமே நடத்தப்படும். சட்டப்பேரவை விதிமுறைகள் இவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.
தமிழகத்தில் நிலவும் நிலைமை குறித்து குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் ஆலோசனை பெறலாமே தவிர பிரதமரிடமோ, உள்துறை அமைச்சரிடமோ ஆலோசனை பெறக்கூடாது.
ஆனால், ஆளுநர் இந்திய அரசிற்கு இது தொடர்பாக தெரிவித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையானால் அது அப்பட்டமான தவறாகும். அரசியல் குழப்பத்திற்குத் திட்டமிட்டே வித்திடுவது ஆகும்.
அரசியல் சட்டம் 163 பிரிவு (2)ன் கீழ் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து ஆளுநர் நிலைமைக்கேற்றபடி முடிவெடுக்க அதிகாரம் உண்டு. அவ்வாறு அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என குறிப்பிடப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சட்டப்பேரவையைக் கலைக்கவோ அல்லது செயல்படுவதைத் தாற்காலிகமாக நிறுத்திவைக்கவோ ஆளுநர் முடிவெடுப்பாரேயானால் தேன்கூட்டை கலைத்தவன் கதிபோல் ஆகிவிடும்.
தமிழ்நாட்டு மக்கள் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ச.க.வை அடியோடு புறக்கணித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டு அரசியலைக் குழப்பிக் காலூன்றலாம் என பா.ச.க. தலைமை கருதுமானால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும்.
ஆளுநர் முடிவெடுப்பதற்குத் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் குதிரைப் பேரத்தை ஊக்குவிக்கவே செய்யும். அரசியலில் நிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். அரசு நிர்வாகம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும். சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும். இப்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை போன்ற முக்கியப் பிரச்னைகளில் தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வரும் பா.ச.க. அரசு தமிழ்நாட்டின் அரசியல் நிலைத் தன்மையை சீர்குலைக்க முயலுமானால் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கொதித்தெழுவார்கள்.
இதற்கு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டமே இரு சிறந்த சான்றாகும்.
கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...