Wednesday, February 15, 2017

வன வளர்ப்பா? வன அழிப்பா?

By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 15th February 2017 01:09 AM  |    
narayanan
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் காடுகளுக்கும் உள்ள உறவுநிலை சாமானியர்களுக்கு சற்று புரிபடாத விஷயம். ஆனால் வனத்துறை நிபுணர்களுக்குக்கூட புரியாதிருப்பது வியப்பாயுள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்தை உயிர்ச்சூழல் கட்டமைப்பு என்ற சொல்லாலும் - அதாவது Ecological Sysytem என்றும் கூறுவர். பாரம்பரியக் காடு என்பதில் ஒவ்வொரு மரமும் ஒரு உயிர்ச்சூழல் கட்டமைப்புடன் இயங்குகிறது.
உயிர்ச்சூழல் கட்டமைப்பு என்பது பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஒரு அங்கம். தமிழில் ஐந்திணை என்போம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வகைப்படுத்தி ஒவ்வொரு திணைக்கும் உரிய மரங்கள், தாவரங்கள், உணவு, புவியியல் தன்மை, மக்கள் என்று வகையானதைப்போல் பல்வேறு வகையான உயிர்ச்சூழல் கட்டமைப்புகளின் முழுவடிவமே பல்லுயிர்ப் பெருக்கம்.
மலை, காடு, கழனி, கடல், பாலைவனம் என்று பல வகையான உயிர்ச்சூழல் கட்டமைப்புகளின் ஆலயமே பல்லுயிர்ப் பெருக்கம். அப்படிப்பட்ட உயிர்ச்சூழல் ஆலயம் அதற்கே உரித்தான அமைப்பைப் பெற்றிருக்கும். அது அழிந்தால் புதிதாக உருவாக்க முடியாது. அது இயல்பான நீருற்றுக்களைப் பெற்றிருக்கும். மகரந்தச் சேர்க்கையின் மையமாயிருக்கும். மீண்டும் மீண்டும் ஊட்டம் பெறவல்ல மறுசுழற்சி உரப்பெட்டகமாக அம்மண்ணுக்குள் பலகோடி நுண்ணுயிரிகளின் ஒப்பற்ற நுண்ணிய தட்பவெப்பம் இயங்கிக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட உயிர்ச்சூழலில் பல்லுயிர்கள் ஒன்றை நம்பி ஒன்று வாழ்ந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சூழல் அமைப்பில் உள்ள ஒரு காட்டை அழித்துவிட்டு அங்கு மர வியாபாரிகளின் தேவைக்குரிய மரங்களை நடுவது ஒரு உயிர்ச்சூழல் கட்டமைப்பை அழிக்கும் நாசவேலை. இப்படிப்பட்ட உயிர்ச்சூழல் கட்டமைப்பு அழிப்பால் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களும் பலியாகின்றன.
பல்லுயிர்ப் பெருக்க உயிர்ச்சூழல் கட்டமைப்பாயுள்ள ஒரு காட்டில் மரங்களையும் தாவரங்களையும் உயிர்களையும் இயல்பான மரணத்தைப் பெறும்படி விடுவதே உயிரினப் பெருக்கத்திற்கு அடிகோலும். அப்போது மூன்று விஞ்ஞான சங்கமங்கள் - அதாவது பயோ - ஜியோ - கெமிக்கல் சுழற்சி உருவாகிறது.
இந்தச் சுழற்சியை உருவாக்கும் பழைய - பாரம்பரியக் காட்டை அழித்துவிட்டுப் புதிய மரங்களை நடுவதால் இந்த பயோ - ஜியோ - கெமிக்கல் சுழற்சியைப் பெற முடியாது என்று உலகப் புகழ்பெற்ற சூழலியல் பேராசிரியர் டி.டபிள்யூ. ஷிண்ட்லர்(Schindler)   கூறியுள்ளார்.
இன்று காடுகளின் அவசியத்தைப் பற்றிப் பேசாத அறிவு ஜீவிகளே இல்லை. பூமி உஷ்ணமாவதைத் தடுக்கும் அற்புத ஆற்றல் காடுகளிடம் உள்ளது. புதிதாகக் காடு வளர்க்கும் திட்டம் வேறு. பழைய காடுகளை இருக்கும் நிலையில் காப்பாற்றும் அணுகுமுறைவேறு.
புதிய காடுகள் என்ற பெயரில் பழைய காடுகளை அழித்துவிட்டுப் புதிய காடு வளர்ப்பு என்ற பெயரில் வனப்பகுதியில் யூகலிப்டஸ், தேக்கு, மூங்கில், தோட்டப் பயிர்களை வருமானத்திற்காக நடுவது பல்லுயிர்ப் பெருக்க லட்சியத்திற்கு முரணானது. பல்லுயிர்ப் பெருக்கம் என்ற புரிதல் இல்லாமல் மத்திய - மாநில வனத்துறை வருமானத்தை குறிவைத்து இயங்குவது வேதனையளிக்கிறது.
தனியார் நிலங்களில் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வருமானத்தைக் கருதி மரங்களை நடுவது இயல்பு. ஆனால் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் பழைய காடுகளை அழிப்பது ஆபத்தானது. புதிதாக பண மதிப்புள்ள மரங்களை நடுகிறோம் என்ற பெயரில் பழைய காடுகளை அழிப்பது பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு நல்லதல்ல.
பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய சிந்தனையே இல்லாமல் காடுகளின் மூலம் வனத்துறையின் வருமானத்தை உயர்த்த வேண்டுமென்ற தவறான லட்சியத்தின் கீழ் 1970-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அரசு காடுகளை வெட்டி அழிக்க காடு வளர்ச்சி கழகத்தை(Forest Development Corporation) உருவாக்கியது. மத்திய அரசின் கிளை அமைப்புகளாக 19 மாநிலங்களில் மாநில காடு வளர்ச்சி கழகங்கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் காடு அழிப்பில் ஈடுபட்டன.
"காடுகள் என்றால் மரத்தை விற்றுப் பிழைப்பது'. இது மறைமுகமான குறிக்கோள். காடுகள் மூலம் வருமானத்தை உயர்த்த வேண்டுமென்று நேரிடையாகக் கூறி வருமானமில்லாத காடுகளை அழித்துவிட்டு வருமானம் தரக்கூடிய யூகலிப்டஸ், தேக்கு, மூங்கில் போன்ற மரங்களையும், தோட்டப் பயிர்களையும் சாகுபடி செய்ய மாநில காடு அழிப்பு கழகங்கள் செயல்பட்டு 40 ஆண்டு ஆகிவிட்டது. வருமானத்தையும் கையூட்டையும் ருசித்துவிட்டார்கள். இன்னமும் ருசித்து வருகிறார்கள்.
1970-லிருந்து இன்றுவரை அழிக்கப்பட்ட காடுகளில் வளர்ந்துள்ள வருமான மரங்களின் புள்ளிவிவரம்:
மாநிலம் / ஒதுக்கப்பட்ட காட்டின் நிலப்பரப்பு (ஹெக்.) / அழிக்கப்பட்ட காட்டின் நிலப்பரப்பு (ஹெக்.) / மாற்று மரப் பயிர்கள்.
மகாராஷ்டிரம் - 3,63,000 / 2,95,119 / தேக்கு, மூங்கில்.
மத்தியப் பிரதேசம் - 4,25,000 / 2,35,714 / தேக்கு, மூங்கில்.
சதீஷ்கர் - 1,36,000 / 1,19,167 / தேக்கு,
மூங்கில்.
ஆந்திரா, தெலங்கானா - 83,700 / 80,563 / யூகலிப்டஸ்.
தமிழ்நாடு - 75,000 / 56,485 / யூகலிப்டஸ்.
கர்நாடகம் - 45,000 / 41,663 / யூகலிப்டஸ்.
இதர மாநிலங்கள் - 1,36,300 / 1,16,377 / தேக்கு, மூங்கில், யூகலிப்டஸ் வர்த்தகப் பயிர்கள்.
மொத்தம் - 12,80,000 / 9,03,425.
இந்தியாவில் உள்ள மொத்தக் காடுகளின் நிலப்பரப்பு ஏழு கோடி ஹெக்டேர். இதில் 1.28 கோடி ஹெக்டேரில் காடுகள் அழிக்கப்பட்டு வருமானம் தரும் மரங்களை நட்டு அவை வளர்ந்ததும் வெட்டி வருமானம் பெறப்படுகிறது. இந்த 1.28 கோடி ஹெக்டேர் காடுகள் நீண்டகால குத்தகை என்ற பெயரில் காடு வெட்டி கழகங்களுக்கு தத்தம் செய்யப்பட்டுவிட்டன.
காகிதத் தேவைக்கு யூகலிப்டஸ் வெட்டப்படுகிறது. மரத் தேவைக்கு தேக்கும் மூங்கிலும் வெட்டப்படுகின்றன. காகிதத் தேவைக்கும் மூங்கில் பயன்படும். வடகிழக்கு மாநிலங்களில் சில தோட்டப் பயிர்கள், வணிகப் பயிர்கள் சாகுபடியாகின்றன.
இதெல்லாம் பழைய கதைகள். இப்போது புதுக்கதை மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்துள்ளது. விட்டகுறை தொட்டகுறையாக நிர்ணயிக்கப்பட்ட காடு அழிப்பு திட்டத்தில் பிரம்மபுரி வனப்பகுதியில் 690 ஹெக்டேர் காடுகளை அழித்துவிட்டு 15 லட்சம் தேக்கு மர நடவுத் திட்டத்தை மகாராஷ்டிர காடு வளர்ப்புக் கழகம் செயல்படுத்த முனைந்தது.
அப்போது பிரம்மபுரி பழங்குடி விவசாயிகள் கிளர்ந்தெழுந்து அங்கே ஒரு சிப்கோ இயக்கதை நிகழ்த்திவிட்டார்
கள். 2016-இன் கடைசி மாதங்களில் பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம் நிகழ்ந்து சுமார் 300 ஹெக்டேர் காடுகளைக் காடு வளர்ப்புக் கழகத்திடமிருந்து மீட்டுள்ளனர்.
பிரம்மபுரி வனப்பகுதியை ஒட்டிய கிராமவாசிகள் வன உரிமை பெற்றவர்கள். சுமார் 22 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வன உரிமைச் சட்டம் 2006-இன்படி கிராம சபாத் தலைவர்களுடன் கிளர்ந்தெழுந்து வெட்ட வந்த காடு வளர்ப்பு கழக கூலிப்படையை விரட்டியடித்தனர். எனினும் காடு வளர்ப்பு கழக தாற்காலிகமாகவே வெட்டுவதை நிறுத்தியுள்ளதாகக் கூறுகிறது.
பண மதிப்பில்லாத மரங்கள் என்று முத்திரை குத்தி வெட்டி அழிக்கப்படும் மரங்கள் எவை என்று கவனித்தால் மந்தாரை, செம்மந்தாரை, வாகை, அயிலை, கொன்றை, வேம்பு, இலுப்பை, தான்றி, காட்டுநெல்லி, கத்தக்காம்பு, வேலாமரங்கள், கரங்கள்ளி (கருங்காலியில் ஒரு வகை). இவை தவிர பெயர் அறியப்படாத பல மரங்கள் உண்டு.
இவ்வளவு மரங்களுக்கும் உள்ள மருத்துவப் பயன்களை வனங்களுடன் வாழும் ஆதிவாசி விவசாயிகளே அறிவார்கள். வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஞானசூனியம்.
பழங்குடி மக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் நாட்டு மரங்கள் நாட்டு மருந்துச் சரக்காகப் பயன்படுகின்றன. இலை, குச்சி, வேர், விதை என்று பலவற்றைச் சேகரித்து நகரங்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளுக்குத் தருவார்கள்.
இலுப்பை, புங்கன், வேம்பு, சால் விதைகள் எண்ணெய் வித்துகள், செம்மந்தாரைப்பூ, இலுப்பைப்பூ இவை சேகரமாகின்றன. மந்தாரை இலைகள் வாழை இலைக்கு மாற்று. தையல் இலையாகப்போட்டு சாப்பிடலாம். டெண்டு இலை பீடி இலையாகப் பயனுறும்.
பெண்கள் காடுகளில் பூ, இலை, விதை, குச்சி போன்றவற்றை சேகரிப்பார்கள். இப்படிப்பட்ட ஜீவாதாரங்களை தேக்கு மரமோ, யூகலிப்டúஸா நிச்சயமாக வழங்காது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கும் காடு வளர்ச்சி கழகம், காடு உரிமைச் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பெசா (PESA) என்ற பஞ்சாயத்து எக்ஸ்டென்ஷன் ஷெட்யூல்டு ஏரியா சட்டம் 1996 - அடிப்படையில் காடுகளை ஒட்டி வசிக்கும் பழங்குடி - கிராம விவசாயிகளுக்கு அவர்கள் அனுபவித்து வரும் வன விளைபொருள் சேகரிப்பு உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் சமூகத்தின் காடு உரிமைச் சட்டம் 2011-இன் அடிப்படையில் காட்டைக் காப்பாற்றிப் பாதுகாக்கும் உரிமை பழங்குடிகளுக்கு உண்டு என்பது மட்டுமல்ல, அனுபவ அடிப்படையில் காடுகளின் குறிப்பிட்ட பகுதிகள் அவர்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
மேற்படி சட்டங்களை அடிப்படையாக வைத்து பிரம்மபுரி வனங்களில் காடு வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 690 ஹெக்டேரில் 295 ஹெக்டேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. வனப்பிரதேச கிராம சபாக்களின் உரிமைகளைப் புறந்தள்ளும் மகாராஷ்டிர காடு வளர்ச்சிக் கழகம் பெரு வணிகர்களின் லாபத்தைக் குறிவைத்து இயங்குகிறது.
காகிதத் தொழிற்சாலை மற்றும் மர வியாபாரிகளின் தேவைக்கு தனிப்பட்ட விவசாயிகளின் பட்டா நிலத்தில் மரம் வளர்க்க வனத்துறை உதவி செய்கிறது. அப்படிப்பட்ட விவசாயிகள் "நபார்டு' வங்கி உதவியுடன் உற்பத்தியாளர் நிறுவனங்களும் கூட்டுறவு அடிப்படையில் உதவி செய்யும்போது காடு வளர்ச்சி கழகங்கள் தேவைதானா?
ஏழைகளுக்கும், பறவை விலங்கினங்களுக்கும் வாழ்வளிக்கும் பழைய காடுகளை அழிப்பது மாபெரும் பாவச் செயல். பல்லுயிர்ப் பெருக்க அடிப்படையில் புதிதாக நட்டு வளர்க்கப்படும் தேக்கும் யூகலிப்டஸும் காடுகளில் உள்ள பழைய நாட்டு மரங்களுக்கு ஈடாகாது.
பூமியைக் குளிர்ச்சிப்படுத்தும் காட்டில் உள்ள நாட்டு மரங்கள் காப்பாற்றப்பட வேண்டும். காடு வளர்ப்பு என்று சொல்லி நாட்டு மரங்களை அழிக்க ஒரு கழகம் தேவைதானா?
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
ஆர்.எஸ். நாராயணன்

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...