தகர்ந்த சசிகலாவின் பகல் கனவு! #OPSVsSasikala #DACase
வருவாய்க்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில், சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், சசிகலாவின் முதல்வர் கனவு, நனவாகாமால் போயுள்ளது. எனவே சசிகலா தரப்பில் இருந்து வேறு ஒருவரைத்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக, அதாவது சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக நீடித்து வரும் அரசியல் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், கர்நாடக அரசு மற்றும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வருவாய்க்கு அதிகமாக சுமார் 66 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்துசேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக மாநிலம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு அளித்தது. தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அப்போது முதல்வராக பதவியில் இருந்த ஜெயலலிதா பதவியிழக்க நேரிட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயலலிதா, விடுதலையானதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியமைத்தது. என்றாலும் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, பிப்ரவரி 5-ம் தேதி அந்தக் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோதிலும், தான் நிர்பந்தப்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். இந்த நிலையில்தான், அ.தி.மு.க-வில் இரு அணிகள் செயல்பட்டு வந்தன.தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டவோ அல்லது சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவோ செய்யாத சூழலில், உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது
உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சசிகலா அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதும், வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.
இதையடுத்து ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர், அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்றும், இன்று மாலைக்குள் அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பையும் அவர்கள் உறுதி செய்தனர்.
சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அவரது முதல்வர் கனவு தகர்ந்து போனது. இனி அவர் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்பு இல்லை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சசிகலா தரப்பு, எம்.எல்.ஏக்களை திரட்டினால், வேறு ஒருவரை முதல்வர் பதவிக்கான நபராக, அதாவது புதிய சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- சி.வெங்கட சேது
No comments:
Post a Comment