சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?! #OpsVsSasikala
எஸ்.கிருபாகரன்
பத்து ஆண்டுகளுக்குப்பின் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த 60 நாட்களுக்குள் அவரது தோழி என நேற்றுவரை சொல்லப்பட்ட சசிகலா, பொதுச் செயலாளர் பதவியேற்ற கையோடு முதல்வர் பதவிக்கான காய்நகர்த்தல்களை செய்துவருகிறார். நேற்றுவரை அம்பியாக இருந்த பன்னீர்செல்வம் ஒரே நாள் இரவில் அந்நியனாக மாறி அதகளம் செய்துவருகிறார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கோலம் கொண்டுவிட்ட அவர், காபந்து சர்க்காராக இருக்கும் நிலையிலும் சசிகலாவுக்கு கிலி கொடுக்கிறார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக அரசு பராமரிக்கும் என அறிவிப்பு செய்திருக்கிறார் இப்போது காமராஜரின் இறப்புக்குப்பின் நுங்கம்பாக்கம் திருமலை வீதியில் அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்குரியவரிடமிருந்து விலைக்கு வாங்கி அரசு நினைவு இல்லமாக்கி பராமரித்துவருகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தனது ஆசான் அண்ணாத்துரையின் காஞ்சிபுரம் இல்லத்தை அரசு செலவில் வாங்கி நினைவு இல்லமாக்கினார். சம்பிரதாயமாக இல்லாமல் அன்றைய கவர்னர், மற்றும் வெளிமாநில அமைச்சர்கள் பலரை வரவழைத்து சிறப்பாக அதன் திறப்பு விழாவை நடத்தினார்.
ஆனால் தனக்கு நினைவு இல்லம் அமைக்க அரசுக்கு செலவு வைக்க விரும்பாத எம்.ஜி.ஆர், தனது சொந்த அலுவலகத்தை அதற்காக ஒதுக்கி உயில் எழுதிவைத்தார். அதன்படி தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள அலுவலக கட்டிடம் அவரது காலத்திற்குப்பின் அவரது நினைவு இல்லமானது. அதன் பராமரிப்பு செலவைக்கூட அரசுக்கு உருவாக்கவிரும்பாமல் தனக்கு சொந்தமான ஆலந்துார் மார்க்கெட்டிலிருந்து வரும் வருமானத்தை இதன் பராமரிப்புக்கு உயில் எழுதிவைத்தார் அவர்.
இப்படி அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் வரிசையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தையும், அரசு அவரது நினைவு இல்லமாக பராமரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா புகழ்பெற்ற நடிகையாக இருந்தபோது தன் தாயாருடன் இணைந்து வாங்கிய இடம். சென்னையின் மத்தியில் தனக்கு ஒரு இடம் வேண்டும் என்ற ஆசையில் ஜெயலலிதா வாங்கிய அந்த இடம், அவரது வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கு சாட்சியான இடம். ஜெயலலிதாவுக்கும் அவரது தாயார் சந்தியாவுக்கு சரிபங்கு கொண்ட இந்த வீட்டின் பூமி பூஜை அன்றைய சினிமா பிரபலங்கள் புடை சூழ நடத்தப்பட்டது. சோகம் என்னவென்றால் வீட்டை மகளுக்காக பார்த்துப் பார்த்து கட்டிய சந்தியா, அதன் கிரகப்பிரவேசத்தின்போது உயிருடன் இல்லை. அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார்.
தாயார் இறந்த சோகத்துடன் வீட்டிற்கு குடிபுகுந்த ஜெயலலிதாவின் மரணமும் அங்கிருந்தபோதுதான் நடந்தது. அதைத்தான் இப்போது நினைவு இல்லமாக்கப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்திருக்கிறார். ஆனால் மற்ற தலைவர்களைப்போன்று இந்த அறிவிப்பு ஜெயலலிதாவை கவுரவிக்கும் முயற்சி அல்ல; சசிகலாவிற்கு எதிரான பன்னீர்செல்வத்தின் ஆடுபுலி ஆட்டத்தின் முதற்பகுதி என்கிறார்கள். அதிமுகவை கைப்பற்றியிருக்கிற சசிகலா, ஜெயலலிதாவின் நடை உடை பாவனைகளை அப்படியே பின்பற்றிவருகிறார். அந்த வரிசையில் போயஸ் கார்டன் இல்லம் தொண்டர்களுடன் ஒரு உணர்ச்சி பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் என்பதற்காக தொடர்ந்து அங்கேயே குடியிருந்துவருகிறார். எங்குபோய் 1000 ஏக்கரில் நிலம் வாங்கி அரண்மனை கட்டினாலும் தனது அரசியல் செல்வாக்குக்கு போயஸ் கார்டன் வீடே ராசியானது என நினைக்கிறார் சசிகலா.
நெட்டிசன்களில் தொடங்கி நேற்று முளைத்த கட்சிகள் வரை அவர் அங்கு வசிப்பதை கேள்விக்குள்ளாக்கினாலும் ஜென் நிலையில் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் நேற்றுவரை அதே இல்லத்தில்தான் மொத்த மீடியாவையும் அழைத்து பேட்டியளித்துக்கொண்டிருக்க அதுதான் காரணம். ஆச்சர்யம் என்னவென்றால் அதுபற்றி கேள்வி எழுப்பவேண்டிய முழு உரிமையுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்.
இந்த நிலையில்தான் ஜெயலலிதா இறப்புக்குப்பின் நேற்றுவரை அந்த வீட்டில் பக்கோடா சாப்பிட்டுவிட்டு பணிவாகக் காட்டிக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் முரண்பட்டதும் இன்று வீட்டை நினைவு இல்லமாக்குவோம் என்கிறார். கோட்டையே குடிமூழ்கப்போகும் இந்த நேரத்திலும் ஆளுநரை சந்தித்து அவர் வைத்த கோரிக்கைப்பட்டியலில் ஆறாவதாக இந்த நினைவு இல்ல விவகாரத்தை செருகி, சசிகலாவுக்கு திகில் கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணியின் அதிகார அடையாளமாகவும் தொண்டர்களுடன் உணரவுப்பூர்வமான உறவு கொண்டஅந்த வீட்டை சசிகலாவிடமிருந்து எட்டிப்பறிப்பதன்மூலம் சசிகலாவின் அரசியல் சிறகுகளை வெட்டநினைக்கிறார் ஓ.பி.எஸ் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சசிகலாவை எதிர்ப்பது என முடிவெடுத்துவிட்டபின் அவரை போயஸ் இல்லத்திலேயெ தொடரச்செய்வது சசிகலாவின் மீது ஜெயலலிதாவின் பிம்பத்தை தொண்டர்கள் பொருத்திப்பார்க்கச் செய்துவிடும். மேலும் இது சசிகலாவுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியை தரும். இது தங்களின் எதிர்ப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டயாக இருக்கும் என்பதால் உடனடியாக சசிகலாவை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது என நினைக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இதற்காக தீபாவின் மூலம் காய்நகர்த்தினால் அது தனிப்பட்ட சொத்துப்பிரச்னையாக மாறி பல வருடங்கள் வழக்கு நடக்கும். தங்கள் எண்ணம் ஈடேறாது என்பதால் அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டார் என்கிறார்கள். அதேசமயம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதன்மூலம் ஜெயலலிதா உயில் ஏதாவது எழுதியிருந்தால் அது வெளிவரும் என்பதும் ஓ.பி.எஸ் தரப்பின் எண்ணம் என்கிறார்கள்.
ஓ.பி.எஸ் தனது ஆசையை வெளிப்படுத்திவிட்டாலும் அதன் சட்டப்படியான சாத்தியம் எந்த வகையில் உள்ளது என்பது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் அவர்களிடம் கேட்டோம்.
“பொதுவாக அரசு ஒரு தலைவரை கவுரவிக்க அவர்கள் வாழ்ந்த வீட்டையோ அல்லது அவர்கள் தொடர்பான ஒரு இடத்தையோ நினைவு இல்லமாக்கும். அப்படி அரசு முடிவெடுத்தால் சம்பந்தப்பட்ட சொத்தை நில சுவாதீனம் என்ற பெயரில் அந்த இடத்திற்கு ஒரு மதிப்பை நிர்ணயித்து உரியவர்களிடம் அரசு இழப்பீடு கொடுத்து பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறை. அரசின் இந்த முடிவிற்கு சம்பந்தப்பட்ட இடத்தை வாரிசு அடிப்படையிலோ அல்லது உயிலின்படியோ பெற்றவர் கேள்வி எழுப்பமுடியாது. உயில் அல்லது மற்ற ஆதாரம் அரசின் இழப்பீடு பெறமட்டுமே அவர்களுக்கு உதவும். அப்படி அரசு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அங்கிருந்தவர் வெளியேறவேண்டும். இது ஒரு அரசியல் மூவ் என்றாலும் வாரிசு இல்லாத சொத்து என்பதால் நினைவு இல்லமாக்குவதையே மக்களும் விரும்புகிறார்கள்.
உண்மையில் ராஜினாமா செய்வதற்கு முன்பு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது அன்றே அரசாணையாக மாறி நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால் காலம் தாழ்த்திய இந்த நடவடிக்கையினால் இப்போது கவர்னர் கையில்தான் இதன் முடிவு இருக்கிறது. காரணம் காபந்து அரசின் முதல்வர் என்ற முறையில் அவரால் வழக்கமான அலுவலகப்பணி தவிர வேறு எதையும் செய்யமுடியாது” என்றார்.
“ ஒருவேளை கவர்னர் ஒப்புதலில் ஓ.பி.எஸ்ஸின் இருக்கும் அறிவிப்பு, அரசாணையானால் சசிகலா தரப்புக்கு பெரும் அரசியல் பின்னடைவாகிவிடும். கவர்னர் உத்தரவின்பேரில் உடனடியாக சசிகலாவை வெளியேறக்கூறி அரசு நோட்டீஸ் அனுப்பும். இதை சசிகலாவால் எதிர்க்கவும் முடியாத தர்மசங்கடம் ஏற்படும். மீறி அரசுடைமை ஆக்குவதை அவர் எதிர்த்தால் சொத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழும். அப்படி தனக்கு உயில் எழுதியிருப்பதாக அவர் சொன்னால் அப்போது பல உண்மைகள் வெளிவரலாம் என்பதோடு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதிமுக தொண்டர்களிடையே அவர்மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். இப்படி நினைவு இல்ல அறிவிப்பு மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழச்செய்வதே ஓ.பி.எஸ் திட்டம். எப்படியிருந்தாலும் மக்கள் விருப்பப்படி போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக்குவதே இப்போதைக்கு நல்ல முடிவாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர் கால நிர்வாகி ஒருவர்.
ஓ.பி.எஸ்ஸை 'யு.பி.எஸ்' என்று கலாய்த்தார்கள் நெட்டிசன்கள். 'யு.பி.எஸ்' கூட 'ஷாக்' அடிக்கச் செய்யும் வலிமை உண்டு என காட்ட ஆரம்பித்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!
No comments:
Post a Comment