Tuesday, February 14, 2017


'ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!' சசிகலாவுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்!




''தலைவரு இறந்தபோது... அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு... பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது... அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும் அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ எதிர்த்துச்சோ... அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது'' ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா.

பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைப் பெண் ஜெயலலிதாவுக்கு மாற்றாக, ஒன்றரை மாத அரசியல்வாதியான நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லிக் கேட்கிறீர்கள். 'முடியாது' என்பது தமிழகத்தின் பதில். குறிப்பாக, அரசியல் பேச்சுகளில் பெரும்பாலும் ஒதுங்கி இருக்கும் நாங்கள்கூட, இப்போது முழுநேரம் செய்தி சேனல்களை பார்த்தபடி இருக்கிறோம். 'சசிகலா வேண்டாம்' என்ற உறுதி எங்களுக்குள் இறங்கியிருக்கிறது. உபயம், நீங்களேதான் திருமிகு சசிகலா.

1989-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில், ஆட்சியில் இருந்த தி.மு.க-வினரால் அவைத் தலைவர் முன்னிலையிலேயே அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. தன் கிழிந்த புடவையுடன் அவையைவிட்டு வெளியேறியபோது, இந்த அரசியல் அவருக்கு உட்சபட்ச கண்ணீரைத் தந்தது. பச்சாதாபம் தேடும் தருணத்திலும், 'கருணாநிதி முதல்வராக இருக்கும்வரை இந்த அவைக்கு நான் வரமாட்டேன்' என்ற அவரின் சூளுரையில் இருந்து, 'ஜெ.ஜெயலலிதாவாகிய நான்' என்று அவர் ஆறாவது முறை முதல்வராகப் பதவிப் பிரமாணம்செய்துகொண்டது வரை, தமிழக அரசியலில் மட்டுமல்ல, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இந்திய அரசியலில் இடம்பிடித்தது வரை, அவரின் ஆளுமை அண்ணாந்து பார்க்கக்கூடியது. எங்கள் அம்மா தலைமுறைப் பெண்களுக்கும், எங்களுக்கும், இப்போது எங்கள் பெண் பிள்ளைகளுக்கும், அரசியல் சார்பு தாண்டியும் அவரைப் பிடிக்க, வரலாற்றில் பல காரணங்களை விட்டுச் சென்றுள்ளார் ஜெயலலிதா. அவரின் இடத்தில் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களே சசிகலா... உங்களைப் பற்றி இதுவரை நீங்கள் எங்களுக்குத் தந்துள்ள பிம்பம் என்ன தெரியுமா?

'ஜெயலலிதாவின் தோழி சசிகலா. குடும்பமாக போயஸ் கார்டன் இல்லத்துக்குள் நுழைந்தவர். 'வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம்' என்ற அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்தியவர். ஜெயலலிதாவின் செல்வாக்கை முன்னிறுத்தி பலரின் நிலங்களை அபகரித்தவர். அந்நிய செலாவணி வழக்கு, சாராய ஆலை உரிமையாளர் என குற்றப் பின்னணி கொண்டவர்.'

இவையெல்லாம் நேற்று. இந்தக் காலகட்டங்களில் எல்லாம், நாட்டில் உள்ள அறத்துக்கு எதிரான அடாவடிக்காரர்களில் ஓர் அடாவடிக்காரராகத்தான் உங்களை நாங்கள் பார்த்தோம். அதனால் ஏழோடு எட்டாக உங்களையும் கடந்தோம்.



ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தைச் சூழ்ந்த சந்தேகங்களுக்கு மையப்புள்ளியாக நீங்கள் ஆனபோது, உங்களை தமிழகம் தனித்து கவனிக்க ஆரம்பித்தது. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில்(!) இருந்த நாட்களில், 'எங்க அம்மா முகத்தைக் காட்டுங்க' என்று மாரில் அடித்துக்கொண்டு அழுத அடிமட்ட அ.தி.மு.க பெண்கள் முதல், முகம் பார்க்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆளுநர் வரை, பார்த்த காட்சிகள் அனைத்திலும் 'இவர் ஆபத்தானவர்' என்ற பிம்பத்தை நாங்கள் உங்கள் மேல் கொள்ளச் செய்தீர்கள். ஜெயலலிதா மறைந்தபோது, கட்சி சார்பு தாண்டியும் தமிழகமே அழுதபோதும், அவர் உடல் பூமிக்குள் இறக்கப்படும் தருணத்திலும்கூட சொட்டுக் கண்ணீர் சிந்தாமல் நின்றிருந்த 'உடன் பிறவா சகோதரி'யான உங்களின் மேல், 'இவரையா அந்த இரும்புப் பெண் நம்பினார்?' என்று ஆற்றாமை கொள்ளவைத்தீர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க கட்சியில் அரங்கேறிய நாடக மாற்றங்களில், குறிப்பாக 'சின்னம்மா' வசனங்களில், எங்களை இன்னும் முகம் சுழிக்க வைத்தீர்கள் சசிகலா. கழுத்தை ஒட்டிய பிளவுஸ், கொண்டை, பொட்டு, மோதிரம், வாட்ச் என்று உங்களின் 'ஜெயலலிதாவாதல்' முயற்சியை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமானால் மாறுவேடப் போட்டியில் பரிசு வென்று வந்த குழந்தையை வரவேற்கும் குதூகலத்துடன் ரசித்திருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் வியந்த அந்த ஆளுமையுடன் உங்களை ஒப்பிட்டு கீழிறக்க வேண்டிய அவசியத்தை, நீங்களேதான் எங்களுக்கு ஏற்படுத்தினீர்கள்.

ஜெயலலிதாவின் உறவுகளை அவர் மரணத்திலும் தள்ளிநிற்கவைத்தது, அவரின் சொத்துகள் அனைத்தையும் அபகரித்தது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றியது வரைகூட, படிக்கப் பிடிக்காத மனநிலையுடன்தான் உங்களைப் பற்றிய அந்தச் செய்திகளை நாங்கள் கடந்தோம். ஆனால் உங்களின் அடுத்த காய் நகர்வுகளின் விளைவாக, 'தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராகிறார் சசிகலா' என்று வந்த செய்தி, ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. 'கடைசியா அது நடக்கவே போகுதா?' என்று நிலைகொள்ளாமல் போனது எங்கள் மனம். அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 'என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்' என்றதும், அந்தத் திருப்பத்தை நாங்கள் திடுக்கிட்டு வரவேற்றோம். 'ஓ.பி.எஸ் வேண்டுமா என்பது அடுத்த பிரச்னை. ஆனால், சசிகலா வேண்டாம்' என்று எங்கள் மனநிலையை மாற்றுக்கருத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தியதும், தொடர்ந்த நாட்களில் தமிழகம் பார்த்த உங்களின் செயல்பாடுகளே.

தேர்தலில் நிற்காமல், மக்களைச் சந்திக்காமல், சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கி, ரிசார்ட்டில் அடைத்துவைத்து, 'ஓரளவுக்குதான் பொறுமை' என்று பேட்டி கொடுத்து... 'முதலமைச்சர் நாற்காலிக்காக எதுவும் செய்வேன்' என்கிற ரீதியிலான உங்களின் அணுகுமுறைகள் அனைத்தும் எங்களுக்கு அதிர்ச்சியாக, அச்சமாகக்கூட இருக்கிறது. கூவத்தூரில் எம்.ஏல்.ஏக்களை அவர்களின் வீட்டினரிடம்கூட பேச முடியாத கட்டுப்பாட்டில் அடைத்துவைத்துவிட்டு, அங்கிருந்து நீங்கள் அளித்த பேட்டியில், 'குழந்தைகளை வீட்டில்விட்டு வந்திருக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள். 'பரவாயில்லம்மா... கட்சிக்காக நாங்க அதை செய்றோம்மா' என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்' என்கிறீர்கள். இதை எப்படி உங்களால் மைக்கின் முன் குற்ற உணர்ச்சி இல்லாமல் பெருமையாகச் சொல்ல முடிகிறது? அதிகாரமிக்க அ.தி.மு.க குடும்பப் பெண்கள், குழந்தைகள் நலனிலேயே உங்கள் அக்கறை இது எனில், பாவப்பட்ட தமிழகப் பெண்கள், குழந்தைகள் நலன் குறித்த உங்கள் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டத்தையும் நீங்களே காட்டிவிட்டீர்கள்.

''ஆனா கட்சித் தொண்டன்... ஒவ்வொருத்தரும்... இதவந்து... வேடிக்க பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டாங்க." - கூவத்தூரில் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகளில், காவல்துறை தனக்கான குறிப்பை எடுத்துக்கொள்கிறது. நாங்களும் ஒன்றை உணர்ந்தோம். 'ஜெயலலிதாவாதல்' என்ற உங்களின் முயற்சியில் உண்மையில் நீங்கள் இப்போது வளர்மதி வகையறாக்கள் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.

அனுதாபங்கள்

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...