ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு! #OPSVsSasikala
தமிழகத்தில் அ.தி.மு.க தற்போது இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் நீடித்து வந்த மௌனத்தை, ஒரே இரவில் கலைத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
கடந்த 7-ம் தேதி மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா மீது அடுக்கடுக்கான புகார்களை எடுத்து வைத்தார். இதையடுத்து, கட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று கூறி, ஓ.பி.எஸ்ஸை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கினார் சசிகலா.
அடுத்தடுத்து அரங்கேறிய அரசியல் நாடகங்களின் உச்சக்கட்டமாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மகாபலிபுரம் அருகேயுள்ள கூவத்தூரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில், சசிகலா, தினமும் கூவத்தூர் சென்று நம்பிக்கையூட்டி வருகிறார். என்றாலும், 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் மனநிலையிலேயே உள்ளனர் என்று தெரிகிறது.
ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வான சரவணன், கடந்த 5 நாட்களாக கூவத்தூர் விடுதியில் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார். அவர், இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறி ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அவர் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பத்தினரின் கையில் புரட்சித்தலைவி அம்மா ஏற்படுத்திய ஆட்சி சென்று விடக்கூடாது என்பதால், ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்க முன்வந்தேன்" என்று தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கெனவே 11 எம்.பிக்கள் மற்றும் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு அளித்திருப்பதுடன், வேறு சிலரும் ஓ.பி.எஸ். பக்கம் செல்லக்கூடும் என்பதால். சசிகலா தரப்பு மிகுந்த கலக்கத்தில் உள்ளது.
No comments:
Post a Comment