அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த வடகொரியா!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சில கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் பலரது எதிர்ப்புக்களை சம்பாதித்து வருகிறார். இப்போது அவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அனுப்பி சோதனை நடத்தியது, பலநாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிலும் ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளை அதிகமாக திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோலவே, கடந்த ஆண்டிலும் பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை செய்தது. அப்போதிருந்தே வடகொரியாவுக்கு எதிராக எச்சரிக்கை குவிந்து வருகிறது. கொரியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு பியாங்யானில் உள்ள பாங்யான் விமான தளத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணைச் சோதனை கடந்த ஞாயிறு காலை கொரிய நேரப்படி 7.55-க்கு ஏவப்பட்டது.
இதனை குறிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,"வட கொரிய ராணுவம் அமெரிக்காவினை அடைந்து அணு ஆயுதப்போர் புரியும் வல்லமை கொண்ட அதிக தூரம் பயணிக்கும் ஏவுகனை சோதிக்கும் திறனை நெருங்கி விட்டோம்" என எச்சரித்திருந்தார். ஆனால் அப்போது ட்வீட் செய்த டிரம்ப், 'இல்லை, அவ்வாறு நடைபெறாது' என சொல்லியிருந்தார். ஆனால் சொன்னவாறு அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்துள்ளது வடகொரியா. இதனை தொடர்ந்து அமெரிக்கா வந்த ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவிடம், "ஜப்பானுக்கு அமெரிக்கா 100 சதவிகிதம் துணையாக இருக்கும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை பற்றி கருத்து தெரிவித்த தென்கொரியா, " ஏவுகணை ஜப்பான் கடல்பகுதியில் கிழக்கு பக்கமாக சுமார் 500 கி.மீ வரைக்கும் பயணம் செய்தது" என தெரிவித்துள்ளது. ஆனால் 'இதனை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது' என ஜப்பான் பிரதமர் அபே மறுத்துள்ளார்.
No comments:
Post a Comment