சூடுபிடிக்கிறது ராமமோகன ராவ் விவகாரம்
தமிழக வரலாற்றில் முதல் முறையாக, தலைமை செயலகத்தில் புகுந்து, தலைமை செயலர் அறையில், சோதனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் பற்றி தகவல் கசிந்ததால் தான் அங்கு, வருமான வரித்துறையினர் சென்றனர். அவை, ராவ் ரகசியமாக பேசுவதற்காக பயன்படுத்தியவை. அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்ல மாட்டார். அவற்றை, வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அவற்றில், ராவ், யார், யாருடன், எத்தனை முறை பேசினார் என்பது போன்ற தகவல்கள்; வீடியோ, ஆடியோ பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதி, அதை பத்திரமாக வைத்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்யும் பணி தற்போது துவங்கி உள்ளது.
தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ராவ் வழக்கை, சிறப்பு வழக்காக நாங்கள் கருதவில்லை. போலீசார் போல் நாங்கள் அதிரடி காட்ட முடியாது. எங்கள் துறையின் நெறிமுறைப்படியே, விசாரணை நடைபெறும். அது, திட்டமிட்ட கோணத்தில் தொடர்ந்து வருகிறது. ராவின் மொபைல் போனில் உள்ள விபரங்கள் சேதம் அடையாமல், சேகரிக்கப்பட வேண்டும். அதனால், வேறு துறையில் இருந்து, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து, அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். இதில், முக்கிய விபரங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எடப்பாடி மீதும் விசாரணை? : சசிகலா கோஷ்டியால், அ.தி.மு.க.,வின், சட்டசபைக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது, பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறுகையில், 'எடப்பாடி பழனிச்சாமி மீது, வருமான வரி தொடர்பான வழக்கு உள்ளதா, விசாரணை நடக்கிறதா என்ற தகவல்களை, இப்போது வெளியிட முடியாது. அவரது மகன் மீது, விசாரணை ஏதும் நடக்கவில்லை' என்றனர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment