Saturday, February 11, 2017

“ஆம்... எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான்!” - தமிழிசை செளந்தர்ராஜன் ஒப்புதல்

தமிழிசை
ஆதரவு, எதிர்ப்பு என்று நிமிடத்துக்கு நிமிடம் மாறிவரும் அரசியல் சூழல்களால் தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. ''டெல்லி மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழக அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது'' என்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவரோடு பேசினோம்...

''தமிழக அரசியல் சூழல் உச்சபட்ச குழப்பத்தில் இருக்கிறது. காபந்து முதல்வர் பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஒருவர் இருக்கிறார். அரசியல் சூழ்நிலை, உணர்வுப்பூர்வமான சூழ்நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் அரசியல் சூழ்நிலை என்பது கடந்த இரண்டு மாதங்களாக நிலையான ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இந்த ஆட்சியில் பெரிய குறைகள் என்று எதையும் சொல்லவும் முடியாது. அதுமட்டுமல்ல, மெரினா போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்னை, வர்தா புயல் என்று இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட சவாலான சூழ்நிலைகளையும்கூட திறம்பட கையாண்ட ஆட்சி நிர்வாகம் என்றே சொல்லவேண்டும். எல்லோரும் எளிதில் சந்தித்து தங்கள் குறைகளைச் சொல்லக்கூடிய இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். ஏற்கெனவே தமிழக அரசியல் பட்டுப்போயிருந்த அரசியல் நாகரிகத்தை மறுபடியும் துளிர்விடச் செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தும் தலைவராகவும் இருந்தார்.

இந்த இரண்டு மாதங்களுக்குள் தமிழக முதல் அமைச்சரை மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது? 'எனக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது. முதல்வருக்குத் துணையாக மட்டுமே இருந்துவருகிறேன்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த ஒருவர் இப்போது இந்த இரண்டு மாதங்களுக்குள் தானே முதல்வராக வந்துவிட வேண்டும் என்று அவசரம் காட்டுவது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன? இப்போது இவர்கள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், இதை நோக்கித்தான் இவர்களது வாழ்நாள் திட்டம் இருந்ததா என்ற கேள்வி அதிகமாக எழுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொருத்தவரை, ஒருவரை இல்லத்தில் பணியாற்றுவதற்கும் இன்னொருவரை களத்தில் பணியாற்றுவதற்கும் தயார் செய்து வைத்திருந்தார். இதில், இல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இப்போது களத்தில் பணியாற்றப்போகிறேன் என்று வரும்போதுதான் பிரச்னையே வருகிறது.''

''தங்கள் கட்சியில் இருந்து யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களது உட்கட்சி பிரச்னைதானே?''

''அப்படியில்லை... ஒரு கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது வேண்டுமானால், அவர்களது உட்கட்சிப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், முதல்வர் என்று வரும்போது வெறுமனே உட்கட்சிப் பிரச்னை என்று சொல்லி புறந்தள்ளிவிட முடியாது. அது ஆறு கோடி தமிழர்களின் பிரச்னை; தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பிரச்னையாகத்தான் பார்க்கவேண்டும்.

நெடுநாட்களாக தமிழக அரசு முழுமையாக இயங்கமுடியாத சூழல்தான் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, கோர்ட் - கேஸ் என்று போய்க்கொண்டிருந்தது; அடுத்ததாக ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்தார்; அதற்குப்பின் இன்றைய சூழ்நிலை... இப்படியே போய்க்கொண்டிருந்தால், இந்த நிலையற்றத் தன்மை தமிழக மக்கள் நலனுக்கு நல்லதல்ல.
சட்டசபை தேர்தல் முடிந்து ஒருவருடம் கூட முடியவில்லை. அதற்குள் சுயநல அரசியலால் ஏன் இப்படியொரு குழப்பம் விளைவிக்கப்பட்டது? ஏன் இந்த அவசரம்? அதற்கு என்ன அவசியம்? முதல்வர் பதவி என்பது நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே தவிர... ஆட்சி - அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு தனது பலத்தைக் காண்பிப்பதற்கு அல்ல...!''

''ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை சசிகலா கவர்னரிடம் கொடுத்தபின்னரும், ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னர் தரப்பில் இவ்வளவு காலதாமதம் ஏன்?''

''மிரட்டப்பட்டோம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது' என்றெல்லாம் ஓ.பி.எஸ் கூறிவருகிறார். அவரோடு அந்தக் கட்சியின் அவைத்தலைவர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் இதே கருத்தைக் கூறி ஒன்றைணைகிறார்கள். ஒரு முதல்வரே மிரட்டப்பட்டுள்ளார் என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட்டனரா? என்ற கேள்வி வருகிறது.... இல்லையா? நாட்டு மக்களின் எண்ணம் ஒருபக்கமாக இருக்கும்போது, எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக கவர்னர் எப்படி அவசரமாக முடிவெடுக்க முடியும்? முடிவெடுத்த பின்னர் கவர்னரால் பின்வாங்க முடியாது. எனவே, உண்மையான சூழலை ஆராயந்து, அறிந்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கு காலதாமதம் ஆகத்தான் செய்யும்.''





''ஓ.பி.எஸ் - சசிகலா இருவரில், பி.ஜே.பி ஆதரவு யாருக்கு?''

''இவருக்கு சப்போர்ட், அவருக்கு சப்போர்ட் என்று சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்குத்தான் எங்கள் ஆதரவு. அப்படி மக்களின் நலன் சார்ந்த ஆதரவு என்றால் என்ன...? 'ஒரு நிலையான ஆட்சி வேண்டும்' என்பது மட்டும்தான். அப்படி ஒரு நிலையான ஆட்சியை இவர்கள் இருவரில் யார் கொடுக்கமுடியும்? இவர்களில் ஒருவர், ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்டவர். தான் பிரச்னைக்குள்ளாக இருக்கும்போது, தன்னைப்போலவே திறம்பட செயலாற்றுபவர் இவர்தான் என்று அடையாளம் கண்டே இவரை முதல்வராக முன்னிறுத்தியிருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னரும்கூட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்கூட. அடுத்ததாக, நீண்ட நெடுநாட்களாக அரசியலில் தொடர்ந்து இருந்துவருபவர். தற்போதைய சூழலில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர். ஆனால், அந்த இன்னொருவரை ஜெயலலிதா எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவே இல்லை.

ஜெயலலிதாவின் கொள்கைப்படியே செயல்படுகிறோம் என்று சொல்லும்போது, அந்தம்மாவின் விருப்பத்தைத்தானே இவர்கள் செயல்படுத்த வேண்டும்? மாறாக செயல்படுவது எப்படி ஜெயலலிதாவின் பணியை எடுத்துச்செல்வதாக இருக்கும்? இதில் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுவதுபோல் எங்களுக்கும் எழுந்தது... அவ்வளவுதான். மற்றபடி இவங்களுக்கு ஆதரவு, அவங்களுக்கு ஆதரவு என்பதெல்லாம் இல்லை.''

''ஓ.பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக நீடிக்கவேண்டும் என்று பி.ஜே.பி ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?''

''ஓ.பி.எஸ்-க்குத்தான் எங்கள் ஆதரவு என்று சொல்வதைவிட, குழப்பம் இல்லாத, நிலையான ஆட்சியாக நன்றாகத்தானே பணியாற்றிக் கொண்டிருந்த அந்த முதல்வருக்கு ஏன் ஆதரவு கொடுக்கக்கூடாது என்பதுதான் என் கேள்வி.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அரசு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைத்தான் ஆதரிக்கும். அந்தவகையில்தான் நாங்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துக்கொண்டிருந்தோம். இதில், 'ஆதரிப்பது' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன...? ஒரு முதல் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையையும் ஆதரவையும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு... பிரதமரது வழிகாட்டுதல் செயலாக்கம் பெற்று இன்றைக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஊழலற்ற, நிலையான ஒரு ஆட்சி தமிழகத்துக்கு வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, மறுபடியும் ஊழல் கறை படிந்தவர்கள் வருவது நல்லதா? குடும்ப ஆட்சி ஒழியட்டும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். மறுபடியும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆட்சிக்கு வரலாமா? நேற்று கவர்னரை சந்திக்கச் சென்றபோதுகூட சசிகலாவோட அவரது குடும்ப உறுப்பினரும் சென்றிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.!''


-த.கதிரவன்

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...