அ.தி.மு.க.,வுக்கு குட்டி சிங்கம் வந்துள்ளதாம்! * தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார் சசிகலா
கல்பாக்கம் அருகே உள்ள கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் பேசியதாவது:
இந்த இயக்கத்தை தலைவருக்கு பின், ஒரு பெண், தாயாகக் கட்டிக் காத்து வந்தார். அதன்பின், நீங்கள் எல்லாரும் சேர்ந்து, என்னை இந்த இயக்கத்தை நடத்த, அன்பான அழைப்பு விடுத்தீர்கள்.
அதை ஏற்று, நானும் இந்த இயக்கத்தை நடத்த முன்வந்தேன். எந்த அளவுக்கு, நம் எதிரிகள் வலை பின்னுகின்றனர்; கட்சி வளர்ந்து விடுமோ என்ற பயம், நான் பொதுச்செயலரான நாளில் இருந்து துவங்கி விட்டது.
அதற்கு காரணம், என்னை பற்றி நிறைய விசாரித்துள்ளனர். நான் எப்படி; அப்படி, இப்படி சொன்னால் கேட்பாரா என விசாரித்துள்ளனர். அப்போது எல்லாரும் கூறியுள்ளனர். 'இவர், மூன்று ஆண்டுகளாக, கட்சி கஷ்டமான நிலையில் இருந்தபோது, தன் முடிவில் இருந்து, ஒரு, 'இன்ச்' கூட பிறழாமல், ஜெ.,க்கு தோள் கொடுத்து, தளபதியாக இருந்துள்ளார். அதனால், முன்னின்று நடத்தக் கூடிய தகுதி அவருக்கு உள்ளது. அவரை ஜாக்கிரதையாக தான், 'டீல்' செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.
அதன் வெளிப்பாட்டை, தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பன்னீர்செல்வம் என, ஒருவர் உள்ளார். அனேகமாக, நீங்கள் மறந்திருப்பீர்கள். தற்போது, நம் கட்சியில் இல்லை.
அவரையும், என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் மிகவும் அமைதியாக, என்ன சொன்னாலும் தலையாட்டி, சொல்வதை கேட்டு போய் விடுவார் என நினைக்கின்றனர். என்னை பார்த்தால், நான் சிங்கத்தோடு இருந்தவள். குட்டி சிங்கம் புதிதாக வந்துள்ளது என, நினைக்கின்றனர்.
'அ.தி.மு.க.,விற்கு புது குட்டி சிங்கம் வந்துள்ளது. இதை, நாம் எப்படி சமாளிப்பது? எனவே, இப்பவே மீன் பிடிக்கிற மாதிரி, வலையை வீசுவோம்; எப்படியாவது மாட்டிவிடும்' என நினைக்கின்றனர். இந்த சிங்கம், எத்தனை வலை வீசினாலும், அதை எதிர்கொண்டு வெளியே வரும்.இந்த சிங்கத்தோடு கூட இருக்கும் எல்லாரும் சிங்கம் தான். அது, அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு சிங்கத்தை பார்த்து, பின்னால் வருவதும் சிங்கக் குட்டிகளாகத் தான் இருக்கும்.
ஒரு சிங்கம் இல்லை என்றால், மற்றொரு சிங்கம் பிறக்கும். ஜெ., அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். அவர்களை வைத்து, இதை செய்து விடலாம் என நினைக்கின்றனர்.
ஆனால், இங்கு இருப்பவர்கள் தான் அரசாங்கம்; அதை அமைக்கக் கூடியவர்கள் தான், இங்கே இருக்கின்றனர். தலைவரும், ஜெ.,வும் துணையாக உள்ளனர். நீங்கள், ஒரே ஒரு மந்திரத்தை மட்டும், மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக இருந்த நம்மை, இந்த அளவிற்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அதை மறந்து விடாதீர்கள்.
எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பதை காட்ட, வீடியோ எடுக்க சொன்னேன். எந்த நேரத்திலும், தடை போட்டு நிறுத்தி விட முடியாது. இந்த, 129 எம்.எல்.ஏ.,க்களும் தங்கம். இதை யாரும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. அ.தி.மு.க.,வையும், அதனுடைய ஆட்சியையும், அழிக்க நினைக்கின்றனர். நிச்சயம் தோற்று போவர். எல்லாரும் சிங்கங்களாக மாறி விட்டீர்கள்.
நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் வலை போட முடியவில்லை என்றால், குடும்பத்தில் வலை போட பார்ப்பர். ஜாக்கிரதையாக இருங்கள். ஜெ., ஆட்சி, தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி.
அர்ப்பணிப்பு உணர்வோடு, நம்முடைய திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் அன்பை பெற்று, லோக்சபா தேர்தலிலும், அதன்பிறகு வரும் சட்டசபை தேர்தலிலும், மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு, நம்முடைய உழைப்பு இருக்க வேண்டும். நானும் உழைப்பேன்; உங்களுடைய உழைப்பும் தேவை. நீங்கள் அனைவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.,வாக உள்ளீர்கள்.
புதியவர்களும், பழையவர்களும் உள்ளீர்கள். உங்கள் தொகுதியில், தற்போது நடக்கும் நிகழ்வு களை, ஆட்சி நம்மிடம் வந்ததும், இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன என்பதை எடுத்துக்கூறி, தொகுதி மக்களிடம் பழகி, லோக்சபா தேர்தலில், நாம், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
நாம் யார் என்பதை காட்டுவதற்கு, கோபம் பெரிதல்ல; செயல் தான் வேண்டும். அதில் தீவிரமாக இருந்து, வெற்றியை ஏற்படுத்தி, ஜெ., சமாதியில் போய், பாதத்தில் வைக்க வேண்டும்.நான் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜெ., நினைவிடத்திற்கு போனபோது, அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. காலை எடுத்து வைக்க முயற்சித்தபோது, ஒரு சக்தி, என்னை ஈர்த்து கொண்டிருந்தது.
இந்த கட்சியை, தொண்டர்கள் அனைவரும், என்னை நம்பி ஒப்படைத்துள்ளனர். உங்கள் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இந்த இயக்கத்தையும், இந்த ஆட்சியையும், நிச்சயம் என் உயிர் உள்ளவரை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என, உறுதி எடுத்துவிட்டு தான் வந்தேன்.
இந்த இயக்கத்தையும், ஆட்சியையும், எந்த கொம்பனாலும், அசைத்து பார்க்க முடியாது. நிச்சயமாக, அதில் உறுதியாக இருக்கிறேன். கட்சிக்கு, ஒரு பிரச்னை என்று வந்தால், என் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன். ஒரு கஷ்டமான நேரத்தில், நாம் பார்க்கிறோம். வசதி, வாய்ப்பு உள்ளது. ஒரு அமைச்சராக இருந்து, கட்சியை இரண்டாக பிரிப்பதற்கு, இப்போது பன்னீர்செல்வம், நம் கையாலே நம் கண்ணை குத்துகிறார். இந்த சமயத்தில், நீங்கள் நடுநிலையான குடும்பத்தில் இருந்து வந்து, என்னுடன் இருக்கிறீர்கள்; நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.
இந்நிகழ்ச்சியை அ.தி.மு.க., பதிவேட்டில், நாம் எல்லாரும் சேர்ந்து பதிய வைக்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை, எனக்கு உண்டு. நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக, என்னுடன் இருந்தால், தமிழக மக்களுக்கும், நம் கட்சிக்கும், நம்முடைய பணியை செய்து, மேன்மேலும், அ.தி.மு.க.,வை இங்கிருந்து, டில்லி வரை சொல்கிறேன்; யாரும் எதுவும் செய்ய முடியாது.
நம் ஒற்றுமை தான் தேவை. என்னுடன் கூட இருந்தால் போதும், நான் எல்லாவற்றையும் சாதிப்பேன்; எவ்வளவு பேர் வந்தாலும் சாதிப்பேன். அந்த தைரியம் என்னிடம் உள்ளது. அது விலை போகாத தைரியம். யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் எடுத்த முடிவில் இருந்து, பின்வாங்க மாட்டேன். கட்சியையும், ஆட்சியையும் நிலைநாட்ட, எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதை தெளிவாக எடுப்பேன்; கலங்க மாட்டேன். ஜெ.,வுக்கு துணையாக இருந்துள்ளேன். இருவரும், சென்னை சிறையை பார்த்துள்ளோம்; பெங்களூரு சிறையையும் பார்த்துள்ளோம். அதிலிருந்து மீண்டு வந்து, ஆட்சியை பிடித்துள்ளோம்.
பெண் தானே என்று பயமுறுத்தி பார்க்கலாம் என நினைத்தால், ஜெ.,விடம் எப்படி முடியாதோ, அதுபோல் என்னிடமும் முடியாது. எனக்கு ஒன்றே ஒன்று தான். நான் உறுதிமொழி எடுக்கப் போகிறேன். நமது அரசை அமைத்து, ஜெ., சமாதியில், கேபினட் அமைச்சர்களோடு, புகைப்படம் எடுத்து, கோட்டைக்கு போக வேண்டும் என்பது தான் நமது சபதம்.
நீங்கள் அத்தனை பேரும், என்னோடு இருந்தால், ஒரு கோடி பேர் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். நமது ஒன்றரை கோடி உறுப்பினர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். அவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பர்.
அவர்கள், கட்சிக்கு பிரச்னை வரும் என நினைப்பர். தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இயக்கத்தை, ஜெ., வழிநடத்தி மாபெரும் கட்சியாக உருவாக்கி, எம்.எல்.ஏ.,க்களை கொடுத்து சென்றுள்ளார். நாம் ஆட்சி அமைத்து, ஜெ., சமாதியில் உறுதிமொழி எடுத்து, கோட்டைக்கு போகிறோம். சட்டசபை உள்ளே, ஜெ., படத்தை திறக்கிறோம். முக்கியமான விஷயம், நீங்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் அல்ல. ஜெ., வசதியை பார்க்க மாட்டார்.
ஒரு தொண்டர் கூட, நம் கட்சியில் எம்.எல்.ஏ.,வாக முடியும். ஒவ்வொரு தொண்டனும், எம்.எல்.ஏ.,வாக முடியும் என நினைக்கின்றனர். மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஜெ., படம், சட்டசபையில் வைக்க வேண்டும். அதை வைக்க விடாமல் செய்ய, நம் கட்சியில் இருந்து ஆள் போய் உள்ளது. இது, ஜெ.,வுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து, ஜெ.,வின் உண்மையான விசுவாசி என்பதை நிரூபிக்க, ஜெ., படத்தை திறக்க வேண்டும். அதை, நான் பார்த்தால் தான், வாழ்க்கையில், மிகப்பெரிய பாக்கியமாக நினைப்பேன். காலா காலத்திற்கும், கட்சியை அழிக்க முடியாது என, ஜெ., கடைசியாக கூறினார்.
ஒரு பெண்ணை தலைமையாகக் கொண்ட இந்த இயக்கம், அடுத்ததும் நானும் பெண்ணாக வந்து விட்டேன். அந்த படத்தை திறக்கிறது தான் வேலை. அதற்கு எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, படத்தை திறக்க வேண்டும். இந்த வாய்ப்பை, நாம் நழுவ விட்டுவிடக் கூடாது. தி.மு.க.,வினரை பற்றி தெரியாமல் இருக்கலாம். அந்த கட்சி இல்லை என்றால், யார் படத்தை திறப்பர் என நினைக்கின்றனர். இதை, அந்த கட்சியில் இருந்து, ஒரு ஆள் கூறினார். நாங்கள், ஜெ., படத்தை திறப்போம்; அதை பார்க்கத்தான் போகிறீர்கள். ஒரு சபதம் எடுத்துள்ளேன்; அதை தான் கூறுகிறேன்.
எம்.ஜி.ஆர்., படம் இருந்தது. அதன்பின், கட்சியின் அடுத்த தலைவர் ஜெ., படத்தை திறக்க, எந்த இடையூறும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, உங்களுக்கு உள்ளது. ஜெ.,வை மனதில் நினைத்துள்ளோம். அது உண்மை எனக் கூறுவது, சட்டசபை வளாகம்.
இந்த கட்சி பொதுச்செயலர் பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். அந்த பொறுப்பில், துளியும் மாறாமல், இந்த கட்சியின் தலைவர் படத்தை, சட்டசபையில் வைக்க, அரசை பொதுச்செயலர் என்ற முறையில் நடத்திக் காட்டுவேன். அதுவே என் ஆசை; அதை பகிர்ந்து கொள்ளவே வந்தேன்.நாம் ஒரே குடும்பமாக இருந்து, ஜெ., படத்தை சட்டசபையில் திறந்து வைப்போம்.
இவ்வாறு சசிகலா பேசினார்.
பேச்சின் நடுவே, ஆள்காட்டி விரலை உயர்த்தியும், கண்ணை உருட்டியும் பாவனை செய்தது, எம்.எல்.ஏ.,க்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment