Monday, February 13, 2017

கணவர் வழியில் சகோதரி பெற்ற வாரிசுரிமைக்கு சகோதரர் சொந்தம் கொண்டாட முடியாது: உச்ச நீதிமன்றம்


By DIN  |   Published on : 13th February 2017 04:18 PM  |  
SC

மணமான சகோதரி புகுந்த வீட்டு சொந்தங்கள் மூலம் பெற்ற வாரிசுரிமைக்கு, அவரது சகோதரர் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், லலிதா என்பவரது மாமனார் கடந்த 1940-ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மறைவுக்குப் பின், அவரது வாரிசான லலிதாவின் கணவர் அந்த வீட்டின் வாடகைதாரர் ஆனார்.
சில ஆண்டுகளில் லலிதாவின் கணவரும் இறந்துவிடவே, அந்த வீட்டின் வாடகைதாரர் என்ற உரிமை லலிதாவுக்குக் கிடைத்தது.
இந்தச் நிலையில், லலிதா குடியிருக்கும் வீட்டை காலி செய்து தர உத்தரவிடுமாறு அந்த வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே லலிதாவும் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வசித்து வந்த லலிதாவின் சகோதரர் துர்கா பிரசாத், வீட்டை காலி செய்ய மறுத்து வந்தார்.
அதையடுத்து, இதுதொடர்பாக உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லலிதாவுக்கு அடுத்தபடியாக அந்த வீட்டின் வாடகைதாரர் என்ற உரிமையை துர்கா பிரசாத் கோர முடியாது எனக் கூறி, வீட்டை காலி செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து துர்கா பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர். பானுமதி அடங்கிய அமர்வு, தீர்ப்பில் கூறியதாவது:
ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15-இல், கணவர் மற்றும் மாமனார் மூலம் ஒரு பெண்ணுக்குக் கிடைத்த வாரிசுரிமை, அந்தப் பெண்ணின் கணவர் அல்லது மாமனாரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மட்டுமே சேர வேண்டும்.
எனினும், இந்த வழக்கில் மனுதாரர் (துர்கா பிரசாத்) சம்பந்தப்பட்ட பெண்ணின் (லலிதா) சகோதரர் என்பதால், குறிப்பிட்ட வீட்டின் வாடகைததாரர் என்ற உரிமையை அவரால் பெற முடியாது.
அந்த வீட்டில் தனது சகோதரியுடன் மனுதாரர் வசித்து வந்ததால் தனக்கு வாடகைதாரர் என்ற உரிமையைத் தரவேண்டும் என்று மனுதாரர் கோரியிருப்பதையும் ஏற்க முடியாது. மணமான சகோதரியுடன் ஒருவர் வசிக்க வேண்டிய அவசியமில்லை என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025