Monday, February 13, 2017

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை பல்கலை. விவகாரம்: ஒரே ஒருவரின் ஒப்புதலில் ரூ. 5 கோடி விடுவிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரிய அனுமதியின்றி, விதிகளை மீறி ஆராய்ச்சி நிதி ரூ.5 கோடி வேறு பணிக்கு விடுவிக்கப்பட்ட பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக் காலம் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, அப்போதைய உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், அப்போதைய கல்லூரி கல்வி இயக்குநர் சேகர், பேராசிரியர் தங்கம் மேனன் ஆகிய 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
ரூ.5 கோடி விடுவிப்பு எதற்கு?
இந்த நிலையில், நானோ தொழில்நுட்பத் துறைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிதியிலிருந்து ரூ. 5 கோடி நிதி கட்டட ஒப்பந்ததாரர் ஒருவருக்கு விடுவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் சில நாள்கள் கழித்தே தெரியவந்த நிலையில், நிதியை விடுவிப்பது விதிகளை மீறியது மட்டுமின்றி உரிய ஒப்புதலும் பெறவில்லை என்று ஆட்சிக் குழு உறுப்பினர்களும், பேராசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேரவை சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பேராசிரியர்களுக்கு மின்னஞ்சலில் பதிவாளர் டேவிட் ஜவஹர் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், "ஆராய்ச்சி நிதி ரூ. 5 கோடி விடுவிக்க 2014 ஜூலை 25, 2014 டிசம்பர் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியை விடுவிக்க பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவில் இருவர் ஒப்புதல் அளித்துள்ளனர்' என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், பதிவாளர் தெரிவித்திருக்கும் தகவல் பொய்யானவை என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒப்புதல் பெறாமலேயே
விடுவிப்பு- பேராசிரியர்கள் புகார்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.
நானோ தொழில்நுட்பத் துறை சம்மதம் தெரிவிக்காத நிலையில், இவ்வளவு பெரியத் தொகையை விடுவிக்க ஆட்சிக் குழு ஒப்புதல் பெற வேண்டும். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் குழுவில் பெறப்பட்ட ஒப்புதலை வைத்துக்கொண்டு, 2016-இல் நிதியை விடுவிக்க முடியாது. மீண்டும் ஆட்சிக் குழுவில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டு, கட்டடக் குழுவின் ஒப்பதலும் பெறவேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
அதுமட்டுமின்றி, துணைவேந்தர் இல்லாமல் 3 பேர் ஒருங்கிணைப்புக் குழு பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வரும்போது, நிதியை விடுவிக்க இந்த 3 பேரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும்.
இந்த ரூ. 5 கோடி நிதியை விடுவிக்குமாறு 3.2.2016-இல் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளருக்கு (நிதி-3) உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் 3 பேரின் அலுவலக முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளபோதும், ஒருங்கிணைப்பாளரான உயர் கல்வித் துறை செயலர் ஆபூர்வா மட்டுமே அவருடைய முத்திரைக்கு மேல் கையெழுத்திட்டுள்ளார்.
மற்ற உறுப்பினர்களான சேகர், தங்கம் மேனன் இருவரும் 3-2-2016 அன்றைய தேதியில் கையெழுத்திடவில்லை.
எனவே, இது முழுக்க முழுக்க பல்கலைக்கழக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிரானது என்றனர்.
உரிய நடவடிக்கை தேவை
"ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தங்கம் மேனன் எதிர்ப்பு தெரிவித்தே கையெழுத்திட மறுத்துவிட்டார். மேலும், பதிவாளர் அனுமதியளித்த உடனேயே பணம் விடுவிக்கப்பட்டுவிடும். எனவே, இதற்கு உறுப்பினர் சேகரும் ஒப்புதல் அளித்திருக்கிறார் என கூறப்படுவது பொய்யானத் தகவல். அது உண்மை என்றால், பிரச்னை எழுப்பப்படுவதன் காரணமாக பணம் விடுவிக்கப்பட்ட பின்னரே, அவரிடம் (சேகரிடம்) கையெழுத்து வாங்கப்பட்டிருக்கும். இதுதொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
வழக்கமான நடைமுறைதான்- பதிவாளர்
இதுகுறித்து பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியது:
நிதியை விடுவிக்க, அப்போது ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த அபூர்வா மட்டும் கையெழுத்திட்டு, அதற்கு நானும் ஒப்புதல் அளித்தது 3-2-2016 அன்றுதான். ஆனால், அந்தத் தொகைக்கான காசோலை விடுவிக்கப்பட்டது. 10-2-2016-ம் அதற்கு முன்னதாக உறுப்பினர் சேகரின் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. மற்றொரு உறுப்பினரின் ஒப்புதல்தான் பெறமுடியவில்லை.
இது புதிய நடைமுறையல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறைதான்.
ஒரு துறையினுடைய பணத்தை, வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதும், அவசரத் தேவையின் அடிப்படையில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஒரு சிலரின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்துக்கு அனுமதியளிப்பதும் வழக்கமாக நடப்பதுதான். பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம்கூட, இதுபோல துறைகளுக்கு அளிக்கப்படும் ஆராய்ச்சி நிதி, திட்ட நிதிகளிலிருந்துதான் வழங்கப்படுகிறது.
எனவே, இது முறைகேடு அல்ல. இனி வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்துதான் யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
விசாரணை தேவை
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
துணைவேந்தர் தாண்டவன் ஓய்வு பெற்ற பிறகு நானோ தொழில்நுட்பத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ரூ.5 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டு வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேராசிரியர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க துணைவேந்தர் இல்லை. இந்தப் பிரச்னையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலையிட்டு, நிதிமுறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் புதிய துணைவேந்தரை இந்த மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...