Monday, February 13, 2017

குழந்தைகள் உணர்வை மதிப்போம்!

By கே.ஜி. ராஜேந்திரபாபு  |   Published on : 13th February 2017 10:59 AM  |   
பூக்களைக் கிள்ளாதீர், அது குழந்தையின் தலையைத் துண்டிப்பதுபோல்' என்று புகன்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா.
குழந்தைகள் பூக்களைப் போன்றவர்கள். அன்பு - ஆரோக்கியம் என்ற பெயரில் இந்தக் குழந்தைகள் படும் அவதியைப் பார்த்தால் நமக்கு அழுகையே வந்து
விடும்.
உதாரணமாக, குழந்தைக்குச் சோறூட்டும் காட்சி. பல நேரங்களில் குழந்தை அதன் பசிக்குச் சோறுண்ணுவதில்லை. அம்மாவின் ஆசைக்காகத்தான் உண்ணுகிறது. குழந்தைக்குப் பசிக்கிறதோ இல்லையோ, சோற்றை அதன் வாயில் வற்புறுத்தித் திணிக்கிறார் தாய்.
குழந்தை அழும். "பிரம்பு எடுக்கவா' என்று அச்சுறுத்திக் கொண்டே அழ அழ சோறூட்டுவாள் தாய். காணச் சகிக்காது. "சாப்பிடுடா எதிர்வீட்டுப் பையன் உன்வயசு தானே எப்படி இருக்கிறான். நீயும் இருக்கிறீயே புடலங்காய் மாதிரி எலும்பும் தோலுமா' என்று அர்ச்சனை செய்வாள். புடலங்காய் மாதிரி இருப்பதென்றால் என்னவென்று இரண்டு வயது மூன்று வயது குழந்தைக்குத் தெரியுமா?
ஆனாலும், இப்படி ஒப்பிடுவாள் தாய். குழந்தை நன்றாகச் சாப்பிடும் அன்று பூரிப்படையும் தாய், சாப்பிடாத அன்று செய்கின்ற அமர்க்களத்தில் குழந்தை படும் அவதியைப் பார்த்தால் நமக்குப் பரிதாபமாக இருக்கும்.
பல நேரங்களில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ, உறவினர்களோ குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு "அழகாக இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே அக்குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுவார்கள்.
இவர்கள் ஆசைக்குக் கிள்ளுவார்கள். ஆனால், அதுபடும் அவஸ்தை. அய்யோ பாவம், வலியைச் சொல்லவும் தெரியாமல் வீறிட்டழும். அழுகை நின்றவுடன் மீண்டும் யாராவது கொஞ்சலாகக் கிள்ளுவார்கள். மறுபடியும் அழும்.
எதிர்த்து எதையும் செய்ய முடியாத குழந்தை தூக்கிவைத்திருப்பவர் மீது சிறுநீர் கழித்துவிடும். ஒருவேளை அதுதான் அக்குழந்தை காட்டும் எதிர்ப்போ என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
இரண்டு மூன்று வயதுள்ள குழந்தைகளின் விரல்களுக்குப் பென்சிலையோ - பலப்பத்தையோ - சாக்பீசையோ பிடித்து எழுதும் பலம் இருக்குமா? ஆனால், பெற்றோர்கள் அவன் ஏ, பி, சி, டி எழுதவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
"அ, ஆ, இ, ஈ' எழுத வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். ஏ, பி, சி, டிதான் எழுத வேண்டும் என்பார்கள். அக்குழந்தை எழுத முடியாமல் விழித்தால் எதிர்வீட்டுப் பையன் "எல்' வரை எழுதுகிறான். இவன் "சி'யைக்கூடத் தாண்டமாட்டேன் என்கிறானே என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
நன்றாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தையை - சுதந்திரமாக இருக்க வேண்டிய குழந்தையை இப்படி முடக்குகிறோமே என்று கருதமாட்டார்கள்.
மூன்று வயது குழந்தை வீட்டிலே போட்டுக் கொள்ள அவனுக்குப் பிடித்த ஆடையை அவனே பீரோவிலிருந்து கொண்டு வருவான். போட்டுக் கொள்ளட்டும் என்று விடவேண்டியதுதானே. "டேய் அது நல்லா இல்லடா' என்று அவன் கையில் இருந்து தாய் பிடுங்கிவிடுவாள். அவன் அலறி அழுவான். ஒரே போராட்டமாக இருக்கும். அந்த ஆடைதான் வேண்டுமென அடம்பிடிப்பான். தேவையில்லாத இந்த இழுபறி போராட்டம் தேவையா?
பெரியவர்களுக்குப் பிடித்த ஆடையைத் தான் அணிவிப்பார்கள். அது அழகாகத்தான் இருக்கும். ஆனால், அக் குழந்தை மகிழ்ச்சியை இழந்துவிட்டு அன்று பூராவும் சோகமாக இருக்கும்.
"முகத்தை ஏண்டா உம்முன்னு வெச்சிக்கிணு இருக்கே. சந்தோஷமா இருடா' என்ற அறிவுரை வேறு. மகிழ்ச்சி என்பது அவனுள் இருந்து வருவதல்லவா?
ஒரு குடும்பம் கோயிலுக்கருகில் காரைவிட்டு இறங்கியது. அவர்களின் குழந்தை விறுவிறுவென ஓடிப்போய் ஒரு கடையில் இருந்த கார் பொம்மையை எடுத்து வைத்துக் கொண்டது.
வாங்கும் வசதி படைத்த அந்தத் தாய் அப்புறம் வாங்கிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் கையிலிருந்த கார் பொம்மையை வெடுக்கெனப் பறித்து வைத்து விட்டாள். அக்குழந்தை அழுதுகொண்டே சென்றது.
குழந்தையின் கையிலிருந்து ஒரு பொருளை வெடுக்கெனப் பிடுங்குவதுகூட அந்தக் குழந்தையை அவமானப் படுத்துகிற மாதிரிதான். பறிக்காமல் பக்குவமாய் வாங்கி வைக்க வேண்டும். அப்போதுதான் பிறர் கையிலிருந்து எந்தப் பொருளையும் குழந்தையும் பறிக்காது.
குழந்தைகள் விருப்பத்திற்கேற்ப பெற்றோர் நடக்க வேண்டுமென சொல்லவில்லை. தன்னுடைய விருப்பத்தையும் - சுதந்திரத்தையும் பெற்றோர் மதிக்கிறார்கள் என்ற உணர்வை குழந்தை பெறுமாறு பெற்றோரின் அணுகுமுறை அமைய வேண்டும்.
விருப்பம், சுதந்திரம் என்பன போன்ற பெரிய பெரிய வார்த்தைகளைக் குழந்தையறியாது. ஆனால் அவற்றை உணரும். குழந்தைகள் உணர்வுகளை பெரியவர்கள் மதிக்கும்போதுதான் - பிறரின் உணர்வை மதிக்க வேண்டும் என்ற உணர்வை குழந்தை பெறும். மதிக்கப்படும்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி! அது அலாதியானது; அழகானது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...