Friday, February 24, 2017

பொருள் சேர்த்தால் போதுமா?

By எஸ்ஏ. முத்துபாரதி  |   Published on : 24th February 2017 02:39 AM  | 
அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப சேமிக்கும் பழக்கம் இருந்தது. குழந்தைகள் சிறிய உண்டியலில் சேர்த்த பணத்தை ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளன்று உடைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு பிறந்த நாள் கொண்டாடுவது வழக்கமாயிருந்தது.
இன்று நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் வீடுகளில் சேமிக்கும் பழக்கத்திற்கு வாய்ப்பு இல்லை. வாங்குகிற சம்பளத்தில் ஒரு ஆண் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு மதுகுடிக்கும் பழக்கத்தினால் வீணடித்துவிடுகிறான். அவன் தரும் மீதி பணத்தில் சிரமப்பட்டு குடும்பம் நடத்தும் பாடு வீட்டிலுள்ள பெண்ணிற்குத்தான் தெரியும்.
குடும்பம், குழந்தை என இருக்கும் அந்தப் பெண், இப்படி குடித்துவிட்டு வரும் கணவனை என்ன செய்துவிட முடியும்? ஏதாவது கேட்டாலோ, பிரச்னை செய்தாலோ குடி அதிகமாகிவிடுமோ என பயந்து வாழ்ந்து வரவேண்டிய சூழ்நிலை.
இது ஒருபுறம் இருக்க, தினமும் மது குடிக்கும் ஒருவனுக்கு அவன் வேலை செய்யுமிடத்தில் இருந்த நற்பெயர் போய்விடுகிறது. மேலும் உழைப்புத்திறனும் நாளடைவில் குறைந்துகொண்டே வருகிறது.
இதனால், வேலைக்குத் தகுந்த ஊதியமும், ஊக்கத்தொகையும் கிடைக்காமல் போய்விடுகிறது. இதைத்தவிர பலவித நோய்கள், குற்றங்கள் என குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு ஏற்படும் துயரங்கள் ஏராளம்.
பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படாமல் இருக்க அவ்வப்போது ஏதாவது பொருட்களை இலவசமாகத் தந்து அவர்களின் வாயை அடைத்துவிடுவது என்பது வழக்கத்தில் இருந்துவருகிறது.
இந்த இலவசப் பொருட்களின் பட்டியல் அளவில்லாமல் வளர்ந்து வருகிறது. ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையான கல்வி, மருத்துவம் இரண்டும் இலவசமாகக் கிடைத்தாலே போதும், அனைவருடைய வாழ்வும் சிறப்பாக விளங்கும்.
மக்களின் அறிவார்ந்த சிந்தனையை மழுங்கடிக்கவும், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாக்கு வங்கியைப் பெறவும் இலவசங்களை வழங்கி வருகின்றனர்.
அப்படி தரப்படும் இலவசங்கள் பட்டியல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. டி.வி, மிக்ஸி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம், மின்விசிறி, மடிகணினி, காலணி என இன்னும் எத்தனையோ கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
கல்வி பயில பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் இலவச பேருந்து வசதியை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளலாம். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்
பிடம், கல்வி ஆகியவற்றில் இவை வரு
வதால் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதைக்கூட ஏற்கலாம்.
மக்களை வழிநடத்த ஆட்சிமுறை இருக்கிறது என, அதற்காக தேர்தலும் நடத்தி நமக்கான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்களா?
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்கிறார்களா? எந்த அலுவலகம் சென்றாலும் லஞ்சம் இல்லாமல் நமது வேலை நடைபெறுவதில்லை.
அது சாதாரண பிறப்பு சான்றிதழ் வாங்கச் செல்வதிலிருந்து, இறப்புச் சான்றிதழ் பதிவு செய்வது வரை இந்த லஞ்சம் என்கிற ஒன்று எங்கும் இருக்கிறது.
இந்த நூற்றாண்டில்தான் இப்படி உணர முடிகிறது. இப்படியான வளர்ச்சி இல்லாத காலங்களில், மின்சாரம், செல்போன் போன்ற நவீனங்கள் கண்டுபிடிக்காத காலங்களில் எல்லாரும் நிம்மதியாக, நேர்மையாக இருந்ததாக அறிகிறோம். எப்படி மாறியது இந்த சமூகம்.
எல்லாவற்றிற்கும் காரணம் பணம் என்கிற மாயை. ஆம், அந்த பணத்தை வைத்து நாம் எல்லாவற்றையும் சாதிக்க இயலும். அதன்மூலம் நிம்மதியாக வாழ முடியும் என்கிற ஒரு அதீத நம்பிக்கை இப்போது பெரும்பான்மையான மக்களிடம் வந்துவிட்டது. அதற்காக முறைகேடான
வழிகளிலும் கூட சம்பாதிக்க முடிவு செய்துவிட்டார்கள். யார் பாதிக்கப்பட்டாலும் தனக்குத் தேவையான பணம் கிடைக்கிறதா என்பதிலேயே கவனமாக இருக்
கிறார்கள்.
போட்டி, பொறாமை நிறைந்த உலகத்தில் சமாளித்து வாழவேண்டும் என்பதற்காகவே முறையற்ற வழிகளில் சொத்து, பணம் சேர்த்து வைத்துவிட்டுச் செத்துப் போகிறார்கள். அந்தப் பாவப்பணத்தையும், சொத்துக்களையும் அனுபவிக்கும் அடுத்த வாரிசான தலைமுறையினருக்கு, தங்கள் முன்னோர்கள் செய்த பாவத்தில் பங்கு இருக்கும்தானே?
இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா? இனி என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்ய வேண்டும்? ஐம்பதில் வளைக்க இயலாதுபோன தலைமுறையை விட்டுவிடுங்கள். இனிவரும் தலைமுறையாவது தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு இப்போது இருக்கும் பெரியவர்கள் இயன்றவரை பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருங்கள்.
அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று சொல்லிக் கொடுங்கள். வெறும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. நேர்மையாக, நியாயமாக வாழ்வதும், அறவழியில் பொருளீட்டி நமது கடமைகளைச் சரிவர செய்வதும் வாழ்விற்கு தேவை என்பதைப் புரிய வையுங்கள்.
"உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை' என்று சொன்ன விவேகானந்தர் கருத்துகள், "காக்கை குருவி எங்கள் சாதி' என்று பாடிய பாரதியார் என இப்படிப் பல நூறு வழிகாட்டிகள் மூலம் இனி
வரும் தலைமுறைக்கு நாம் வழிகாட்ட இயலும்.
நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களை நம்பிப் பயனில்லை. அரசுப் பணியாளர்களையும் நம்ப முடியவில்லை. எனவே, சமூகக் குற்றங்களை அகற்ற சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டாக வேண்டும். இதற்காக நாம் மேற்கொள்ளும் பாதை என்பது காந்திய வழிகளில் அமைவதுதான் நிரந்தரமான தீர்வாக அமையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024