Last updated : 10:44 (14/02/2017)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! உச்ச நீதிமன்றம் அதிரடி
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 2015 செப்டம்பர் 27-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியே 1 லட்ச ரூபாயும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் கடந்த 2015 பிப்ரவரி 23 முதல் இறுதி வாதம் நடைபெற்று வந்தது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றுடம் அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, நீதிபதி பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வில் ஆஜராகி, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இதுவரை தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஒரு வாரம் கழித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர்.
No comments:
Post a Comment