Monday, September 25, 2017

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களுக்கு இடம் தருவதில் சிக்கல்?

பதிவு செய்த நாள்25செப்
2017
00:01

தொல்லியல் துறையின் தடையின்மை சான்று சிக்கல் காரணமாக, வண்டலுார் - கிளாம்பாக்கம் பஸ் நிலைய திட்டத்தில், எம்.டி.சி., எனப்படும், சென்னை மாநகர போக்குவரத்து பஸ்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு தேவைகளுக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை, கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுார் - கிளாம்பாக்கத்தில், தென் மாவட்ட பஸ்களுக்காக, புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 88 ஏக்கர் நிலம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான உத்தேச வரைபடம், தனியார் கலந்தாலோசனை நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்பட்டது. இந்த வரைபடத்தின் அடிப்படையில், புதிய பஸ் நிலையம், இரண்டு தளங்களாக செயல்படும். 

பொது மக்கள் தரை தளம், முதல் தளத்துக்கு வந்து செல்ல வசதியாக, சென்னை விமான நிலையத்தில் உள்ளது போல, மேம்பாலம் அமைக்கப்படும்.

9.55 ஏக்கர் : ஆனால், விமான நிலையத்தில் உள்ளது போல, இங்கு அமைக்கப்படும் மேம்பாலத்தின் பயன்பாடு, புறப்பாடு, வருகை என, பிரிக்கப்படாது. 

தரை தளத்தில் உள்ள வாயில், அரசு பஸ்களை பயன்படுத்துவோருக்கும், முதல் தளத்தில் உள்ள வாயில், ஆம்னி பஸ்களை பயன்படுத்துவோருக்கும் என, பிரிக்கப்பட உள்ளது.

இதன் அடிப்படையில், பஸ் நிலைய வளாகத்தின் முகப்பில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, மாநகர பஸ்களுக்கான பணிமனை மற்றும் பஸ் நிலைய மேம்பாட்டிற்காக, 9.55 ஏக்கர் நிலத்தை ஒதுக்க திட்டமிடப்பட்டது. அப்போது தான், கோயம்பேடு போல, சென்னையின் பிற பகுதிகளில் இருந்து, மக்கள் இங்கு வந்து செல்ல முடியும். ஆனால், தொல்லியல் துறையின் தடையின்மை சான்று பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், கிளாம்பாக்கம் பஸ் நிலைய திட்டப்பகுதி, 88 ஏக்கரில் இருந்து, 30 ஏக்கராக சுருக்கப்படுகிறது. இதன்படி, பாரம்பரிய சின்னம் உள்ள பகுதி, அதில் இருந்து முதல், 100 மீட்டர் சுற்றளவு பகுதியை தவிர்த்து, மீதம் உள்ள பகுதியில் தான், பஸ் நிலைய திட்டம் செயல்படுத்தப்படும். இடத்தை சுருக்குவதால், திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்படுகின்றன.

அரசின் கருத்து : இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.டி.சி.,க்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட, 9.55 ஏக்கர் நிலம், வேறு தேவைக்கு மாற்றப்படுகிறது. இதனால், எம்.டி.சி.,க்கு, புதிய பஸ் நிலையத்தின் தரை தளம் அல்லது முதல் தளத்தை ஒதுக்கலாமா, வேறு இடத்திற்கு மாற்றலாமா என, ஆலோசிக்கப்பட்டது. பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும், எம்.டி.சி., பஸ்களை ஓரம் கட்டிவிட்டு, சுற்றுலா ஒப்பந்த வாகன உரிமத்தில் இயங்கும், ஆம்னி பஸ்களுக்கு இடம் ஒதுக்கினால், சட்ட சிக்கல் ஏற்படும். எனவே, இதில், அரசின் கருத்தை கேட்டறிந்த பின் முடிவு செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 31.03.2026