Tuesday, September 26, 2017



ஜெ., மரணம் குறித்து விசாரணை :  நீதிபதி பெயரை அறிவித்தது அரசு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.






முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்; டிச., 5 இரவு இறந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

ஜெ.,யின் கைரேகை

ஆனால், 'மருத்துவமனையிலேயே, அதிகாரிகளுடன் ஜெ., ஆலோசனை நடத்தினார்' என, செய்திக்குறிப்பு வெளியானது. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், 'ஜெ., குணமடைந்து வருகிறார். இட்லி சாப்பிட்டார்; கிச்சடி சாப்பிட்டார்' என்றனர். தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவங்களில், ஜெ.,யின் கைரேகை பதிவு பெறப்பட்டது. அப்போது, அவர் சுயநினைவோடு இருந்ததாக,மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

சி.பி.ஐ., க்கு பரிந்துரை

இந்நிலையில், ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு சந்தேங்கள் எழுந்தன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வம், 'ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என, கோரினார்.
அப்போது, அமைச்சர்கள், 'ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை' என, விளக்கம் அளித்தனர்.

அதேநேரத்தில், அ.தி.மு.க., அணிகள் இணைந்த போது, பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று, 'ஜெ., மறைவு குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தற்போது, அமைச்சர்கள், 'நாங்கள் யாரும்,மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். ஜெ., இட்லி சாப்பிட்டதாக, நாங்கள் கூறியது பொய். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.மேலும், ஜெ., அண்ணன் மகன், தீபக்கோ, 'மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே, ஜெ., நினைவுடன் இருந்தார்' என்ற, அதிர்ச்சி தகவலை, இப்போது வெளியிட்டுள்ளார்.

மர்மம் விலகுமா

இதனால், மருத்துவமனையில் ஜெ., இருந்த போது நடந்தது என்ன என்ற சந்தேகம், அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் கிடைக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.
கோவையை சேர்ந்த, நீதிபதி ஆறுமுகசாமி, 65, மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2014 ஏப்., 17ல், ஓய்வு பெற்றார். இவரது விசாரணைக்கு பின், ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுமுகசாமி பின்னணி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தமிழக அரசின் விசாரணை கமிஷனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

* 1952 ஏப்., 28ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை நகராட்சி பள்ளியில் படித்தார்.
* 1971 : அரசு கலைக்கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
* 1974ல் சட்டப்படிப்பு முடித்தார். பின் வழக்கறிஞர் பயிற்சியில் சேர்ந்தார்.
* 1986 மே 16 : ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முனிசிபல் பதவியை ஏற்றார்.
* 1991 ஜூன் 3: அந்நீதிமன்றத்தில் உதவி நீதிபதியானார்.
* 1998 ஜன., 19: மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றினார்.
* 2009 மார்ச் 31: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரானார்.
* 2010 பிப்., 17: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு.
* 2014 ஏப்., 27: நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு
* 2014 ஏப்., 28 ---- 2016 பிப்., 8: மும்பையில் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாணைய தலைவராக இருந்தார்.
* 2016 மார்ச் 21 : மத்திய தீர்ப்பாணையத்தின் சென்னை பெஞ்ச் உறுப்பினராக பொறுப்பேற்பு.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.06.2026